கல்வராயன்மலையில் தொடங்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்ற இளைஞர்கள். 
கல்வி

கல்வராயன்மலையில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: மலைவாழ் இளைஞர்களுக்கான குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு கல்வராயன்மலையில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2(ஏ) மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.03.2022 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மலைவாழ் இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நீண்டதூரம் பயணம் செய்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர், மலைவாழ் இளைஞர்களின் நலன்கருதி கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட சேராப்பட்டு, நல்ல மேய்ப்பர் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மலைவாழ் இளைஞர்களுக்கான குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பினை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் நேற்று இப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 48 நபர்கள் பங்கேற்றனர். மேலும், இப்பயிற்சி குரூப் 4 தேர்வு தொடங்கும் வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் செங்கதிர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT