கல்வி

இந்தூர் | ‘அரசு உதவித்தொகையில் படித்தேன்’ - சிவில் நீதிபதியாகும் காய்கறி வியாபாரியின் மகள்

செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள காய்கறி வியாபாரியின் மகள் அங்கிதா தனது நான்காவது முயற்சியில் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முசாகிதி பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் அசோக் நாகர். இவரது மகள் அங்கிதா (29). சட்டப்படிப்பில் முதுகலைப்பட்டம் (எல்எல்எம்) பெற்றுள்ள அங்கிதா, நீதிபதியாக வேண்டும் என்ற தனது கனவினை தற்போது நனைவாக்கியுள்ளார். சிவில் நீதிபதி தேர்வினை மூன்று முறை எழுதி தோல்வியடைந்திருந்த அங்கிதா, தனது நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அங்கிதா அளித்த பேட்டியில், "சிவில் நீதிபதி தேர்வில் நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. மூன்று முறை தோற்றிருந்தாலும் என் முயற்சியை நான் கைவிடவில்லை. இலக்கை அடைவதில் கவனம் செலுத்தினேன். அந்தப் போராட்டம் எனக்கு பல கதவுகளை திறந்துவிட்டன.

முதலில் நான் மருத்துவராகதான் விரும்பினேன். அதற்கான செலவுகள் அதிகம் என்பதால், நான் நீதிபதியாகும் முயற்சியில் இறங்கினேன். அரசு உதவித்தொகை மூலமாக நான் படித்தேன். சிவில் நீதிபதியாக எனது பணியினைத் தொடங்கிய பிறகு எனது நீதிமன்றத்திற்கு வரும் எல்லோருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்" என்று தெரிவித்தார்.

அங்கிதாவின் தந்தை அசோக் நாகர் கூறும்போது, "எனது மகள் வழ்க்கையில் மிகவும் கடினமான போராட்டத்தை எதிர்கொண்டாலும் தைரியத்தை இழக்கமால் முன்னுதாரணமாக திகழ்வது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT