சென்னை: இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பயிற்சி பெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சிறப்பு அலுவலர் க.இளம்பகவத், மாவட்ட முதன்மை க்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் கரோனா பரவலால் ஒன்று முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் உட்படபல்வேறு தரப்பின் கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வது முக்கியம். அதன்படி மாணவர்கள் குறைந்தபட்சம் பெற வேண்டிய கற்றல் அடைவுகளின் அடிப்படையில் அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு பரிசோதனை இல்லம் தேடி மையசெயலியில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது.
இதையடுத்து தன்னார்வலர்கள் தங்கள் மையங்களுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை ஆய்வினை மே 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த தேர்வுக்கான வழிகாட்டுதல்களை https://youtu.be/b1RY8LkD84g என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே,அனைத்து தன்னார்வலர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.