விழுப்புரம்: கடந்த சில நாட்களாக அரசுப் பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்களைப் பார்த்து தமிழகம் அதிர்ந்து போயிருக்கிறது. ‘மிகவும் பாதுகாப்பான பணி ஆசிரியர் பணி’ என சொல்லப்பட்ட பணி,மாணவர்களின் அத்துமீறலால்தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
பள்ளிக்குள் நடக்கும் மாணவர்களின் ஒழுங்கீனங்கள் அடங்கியவீடியோக்கள் பரவி வரும் நிலையில், ‘பள்ளிகளில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை’ என்றுவேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவைக் கண்டு, ‘பள்ளிகளில் நடந்தஇதுபோன்ற நிகழ்வை வெளியுலகத்துக்கு கொண்டு வந்ததே செல்போனில் எடுக்கப்பட்ட படக்காட்சிதானே!’ என்ற கேள்வி எழாமல் இல்லை.
மாணவர்களின் இந்த ஒழுங்கீனங்களை எவ்வாறு தடுக்க முடியும்? என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செல்லையாவிடம் கேட்டபோது அவர் கூறியது: கரோனா ஊரடங்கால் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. செல்போன் மூலம் பாடம் நடத்துவதால் அனைத்து மாணவர்களின் கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. மீண்டும் பள்ளிகள் இயங்க தொடங்கினாலும்பழைய வாழ்க்கையில் இருந்து அவர்கள் வெளியே வரவில்லை.மாணவர்களைக் கண்டிக்க ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கவேண்டும் என்றார்.
கட்டுப்பாடுகள் அவசியம்
மேலும் இது குறித்து வழக்கறிஞர் சக்திராஜன் கூறியது: பள்ளி மாணவர்களுக்கு சீருடை மட்டுமல்ல, மற்ற அலங்கார விஷயங்களில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசுப் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். மாணவர்களைக் கண்டிக்க ஆசிரியர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
கிராமப்புற பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களை திருத்த முயலும் சில ஆசிரியர்களை, வேறுசில பின்விளைவுகளை எடுத்துச் சொல்லி அதை செய்ய விடாமல் உடன் பணியாற்றும் ஆசிரியர்களே தடுக்கின்றனர். ஒழுங்கீனமான சில மாணவர்களை ஆசிரியர்களே காப்பாற்றி விடுவதால் அவர்கள் அத்துமீறுகின்றனர்.
‘மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் இரண்டாவது தாயாகி திருத்த வேண்டும்’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதற்கான சூழலை அரசுப் பள்ளிகளில் உருவாக்கித் தர வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றார்.