சென்னை: திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் நிறுவுதல் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு (எல்எல்எம்) தொடங்குதல், அரசு சட்டக் கல்லூரிகளில் புதிதாக நூலக கட்டடம் கட்டுதல், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரி நூலகங்களுக்கு சட்டப் புத்தகங்கள் மற்றும் ஏனைய இதழ்கள் வாங்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார். அவர் வெளியிட்ட 8 முக்கிய அறிவிப்புகள்:
> அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு (எல்எல்எம்) தொடங்குதல்.
சென்னைடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை (எல்எல்எம்) பட்டப்படிப்பு பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.
> அரசு சட்டக் கல்லூரிகளில் புதிதாக நூலக கட்டடம் கட்டுதல்.
திருநெல்வேலி மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக நூலக கட்டடம் கட்டப்படும்.
> அரசு சட்டக் கல்லூரிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவுதல்.
திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO System) ரூ.25 லட்சம் செலவில் நிறுவப்படும்.
> சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டறைப்பெரும்புதூர் வளாகத்தில் விளையாட்டுத் திடல் நிறுவுதல்
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டறைப்பெரும்புதூரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் நிறுவப்படும்.
> தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரி நூலகங்களுக்கு சட்டப் புத்தகங்கள் மற்றும் ஏனைய இதழ்கள்
வாங்குதல்.
அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு நேர்வாக, 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுகளில் ரூ. 3 கோடி செலவில் சட்டப் புத்தகங்கள் மற்றும் ஏனைய இதழ்கள் வாங்கப்படும்.
> சட்டத்துறையில் புதிய சட்டப் பட்டதாரிகளுக்கான தன்னார்வப் பயிற்சித் திட்டம் தொடங்குதல்
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டு சட்டப் பட்டப்படிப்பு முடித்த 17 சட்டப் பட்டதாரிகளுக்கென தலைமைச் செயலக சட்டத்துறையில் தன்னார்வப் பயிற்சித் திட்டம் தொடங்கப்படும். இதற்கென, ஒரு சட்டப் பட்டதாரிக்கு ஒரு மாதத்திற்கு உதவித் தொகையாக ரூ.20,000- வீதம், 17 சட்டப் பட்டதாரிகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.40.80 லட்சம் செலவு ஆகும்.
> திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் நிறுவுதல்.
திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், இணைய சட்டங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவை தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் (Centre for Research, Development and Training in Cyber Laws and Cyber Security) ரூ.10 லட்சம் செலவில் நிறுவப்படும்.
> திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் நிறுவுதல்.
திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், வணிகம் மற்றும் மனித உரிமைகள் மையம் (Centre for Business and Human Rights) ரூ.10 லட்சம் செலவில் நிறுவப்படும்.