கல்வி

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித் தேர்வு உண்டு: அரசு உறுதி

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை / திருச்சி: தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை இறுதித் தேர்வு இல்லைஎன பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை மறுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், அனைத்து வகுப்புகளுக்கும் இறுதித் தேர்வு நடக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேற்று கூறியதாவது: கரோனா பாதிப்பு காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் குறைந்த நாட்களே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால், பாடத் திட்டம் ஏற்கெனவே குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் தேர்வு நடக்க உள்ளது.

இந்த ஆண்டு வழக்கம்போல 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு உறுதியாக நடத்தப்படும். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ரத்து என்று வெளியான தகவல் வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட டெல்லி பயணம் வெற்றி அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்தபோது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று.

நடப்பு ஆண்டில் ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நீட்தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார்.

தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாக கடைபிடித்திருந்தாலே, சென்னையில் பள்ளிச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேரிட்டிருக்காது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT