சென்னை: பிளஸ் 2 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் மீண்டும் முன்கூட்டியே வெளியானதால் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது.
அந்த தேர்வில் சில வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தவிர 2-ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு 2 விதமான வினாத்தாள் வடிவமைக்கப்படும். தேர்வு நடைபெறும் நாளில்தான் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும். எனவே, ஒரு வினாத்தாள் கசிந்தாலும் மற்றொன்றை வைத்து தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சகர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி பிளஸ் 2 கணித தேர்வு இன்று (ஏப்ரல் 4) நடைபெறவிருந்த நிலையில், 2 வகையான வினாத்தாள்களும் நேற்று முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில கசிந்தன. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் தற்போது வினாத்தாள் கசிந்துள்ள விவகாரம், கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வெளியான 2 விதமான வினாத்தாள்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருகிறோம். அவை உறுதியானால் புதிய வினாத்தாள் கொண்டு தேர்வுகள் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’என்று தெரிவித்தனர்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் வினாத்தாள் கசிந்துள்ள விவகாரம், கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.