மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் துணைவேந்தர் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பேராசிரியர்கள், ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். கற்பித்தல் பணியில் 205 பேர், ஆசிரியர் அல்லாத பணியில் 280-க்கு மேற்பட்டோர், ஒப்பந்தம், தற்காலிக ஊழியர்கள் 350 பேர் பணிபுரிகின்றனர்.
கரோனா ஊரடங்கால் விடுமுறை, தொலைநிலைக் கல்வி யில் வெளியூர் மையங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவு போன்ற காரணங்களால் பல் கலைக்கழகத்துக்கு வருவாய் குறைந்துவிட்டது. பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட கடும் சிரமத்தை பல்கலை. நிர்வாகம் சந்தித்து வருகிறது.
அதோடு கடந்த 8 மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருந்ததால் நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை உடனுக்குடன் மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், காமராசர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெ.குமார் பொறுப்பேற்றுள்ளார். அவர் பல்கலைக்கழக வருவாயை அதிகரிக்க தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள், அலுவலர்கள் சிலர் கூறியதாவது: இப்பல்கலை.க்கு தொலைதூரக் கல்வியால் அதிக வருவாய் கிடைத்தது. நீதிமன்ற வழக் கால் வெளிமாநில, வெளி மாவட்டங்களிலுள்ள மாணவர்கள் சேர்க்கை மையங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது மதுரை மையங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்கள் சேர்க்கை குறைவால் பல்கலை.க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் ரெகுலர் பேராசிரியர், அலுவலர்கள், ஊழியர்களுக்கு ரூ.4 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியர்களுக்கு ரூ.6 கோடி வரை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த செலவினத்தை சமாளிக்க முடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது. இது தவிர, வாகனப் பராமரிப்பு போன்ற பிற செலவினங்களை மேற்கொள் வதிலும் சிரமம் உள்ளது.
ஏற்கெனவே துணைவேந்தராக இருந்தவர் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், கரோனா போன்ற காரணத்தால் இடர்பாடுகள் ஏற்பட்டன. இருப்பினும், அவர் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த (ஏ ) நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதியை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கையை புதிய துணை வேந்தர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.தற்போது பல்கலை.யின் தரம் உயர்த்தப்பட்டிருப்பதால் தொலை நிலைக் கல்வி, ரெகுலர் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள் ளது. அதற்கேற்ப புதிய பாடத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிரிவுகளில் பதவி உயர்வுக்காக பலர் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கான சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மத்திய அரசிடமிருந்து யூஜிசி (பல்கலை. மானிய நிதி) நிதி வந்தாலும், மாநில அரசிடமிருந்தும் நிதியை பெற சில வழிமுறைகள் உள்ளன. இதற்கான முயற்சிகளை புதிய துணைவேந்தர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.