அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 196 மையங்களில் நேற்று நடைபெற்றது. 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் தமிழகம் முழுவதும் 196 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை கட்டாய தமிழ் மொழித் தாள் தேர்வும், சம்பந்தப்பட்ட பாடத் தேர்வும் நடைபெற்றன. பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை பொது அறிவுத் தாள் தேர்வு நடைபெற்றது.
89.40 சதவீதம் பேர்: உதவி பேராசிரியர் பணியில் 48 பாடப் பிரிவுகளில் உள்ள 2,708 காலி இடங்களுக்கு 47,048 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்றைய தேர்வில் 42,064 பேர் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக மாநில அளவில் 89.40 சதவீதம் பேர் தேர்வு எழுதியதாக டிஆர்பி தலைவர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
50 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட கட்டாய தமிழ் மொழித் தாள் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்வர்களின் மற்ற விடைத்தாள்கள் (பாடத்தேர்வு மற்றும் பொது அறிவு கட்டுரை தாள்) மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாடத்தேர்வுக்கு 150 மதிப்பெண்ணும், பொது அறிவு கட்டுரைத் தாள் தேர்வுக்கு 50 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டத் தேர்வான நேர்காணலுக்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.
எழுத்து தேர்வு குறித்து தேர்வர்கள் கூறும்போது, "நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன. எனினும், வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. முதுகலைப் படிப்பில் படித்ததை தாண்டி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அனைத்து பாடங்களிலும் கேள்விகள் இதுபோலத்தான் இருந்தன" என்று தெரிவித்தனர்.