கல்வி

அரசுப் பள்ளிகளில் 3 நாட்கள் புத்தகப் பை இல்லாத கல்வி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ‘மகிழ்வுடன் முன்னேறும் திட்டம்’ 6,279 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1.89 கோடியில் அறிமுகம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவை யில் அறிவித்தார். இத்திட்டமானது பள்ளிகளில் தற்போது அமல்படுத்தப்பட உள்ளது.

அனைத்து மாணவர்களின் பல்வேறு திறன்களையும், ஆர்வங்களையும், படைப்புகளையும் நேரடியாக கண்டு பாராட்டுவதற்கான ஒரு திறந்த மேடையாக இது அமைகிறது. ஒவ்வொரு பள்ளியும் தங்கள் சூழல், மாணவர் வயது, திறன் மற்றும் உள்ளூர் வளங்களுக் கேற்ப நிகழ்வுகளைத் தாங்களே திட்டமிட்டு செயல்படுத்தலாம்.

நடப்பு கல்வியாண்டில் மகிழ்வுடன் முன்னேறும் தினத்தை டிச. 1, ஜன.12 மற்றும் பிப். 2-ம் தேதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு 3 நாட்களுக்கு ரூ.3 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.

மகிழ் முற்றம் மாணவர் குழுத் தலைவர்கள், மாணவர் அமைச்சர்கள், மகிழ் முற்றம் மாணவர் குழு வகுப்புத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து ஒட்டுமொத்த திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும். விளையாட்டு, கலை, இலக்கியம், விநாடி-வினா, படைப்பு, புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் என களங்களை வடிவமைத்து திட்டமிட வேண்டும்.

இதற்காகத் திட்டமிடும் நாட்களில் காலையில் 3 மணி நேரமும், மதியம் 2 மணி நேரமும் மாணவர்கள் தங்கள் திறன் செயல்பாடுகளை வெளிக்காட்டலாம். மாணவர்களின் செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசகர்களாக இருக்க வேண்டும். சிறப்பாக செயல்பட்ட மாணவர்களின் தனித்திறனைப் பாராட்டி அங்கீகரிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT