கல்வி

சேதி தெரியுமா? - ராம்நாத் கோவிந்த்: 14-வது குடியரசு தலைவர்

செய்திப்பிரிவு

இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதைத் தொடர்ந்து, ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், கிட்டத்தட்ட 65 சதவீத வாக்குகள் பெற்ற ராம்நாத் கோவிந்த், நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் மீரா குமார் 34 சதவீத வாக்குகளைப் பெற்றார். மக்களவை பொதுச் செயலர் அனூப் மிஸ்ரா குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத்துக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. ஜூலை 25 அன்று, நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி ஏற்கிறார்.

தேசவிரோதக் குற்றம்: மூன்று ஆண்டுகளில் 165 பேர் கைது

கடந்த மூன்று ஆண்டுகளில் 165 பேர் தேசவிரோதக் குற்றத்துக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் தெரிவித்தார். ஜூலை 19-ம் தேதி, மாநிலங்களவையில் பேசியவர், “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி, 2014-ல், தேசவிரோதக் குற்றத்துக்காக 58 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 47 பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. 2015-ல், கைது செய்யப்பட்ட 73 பேரில் 30 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. 2016-ல், 34 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 28 பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. இதுவரை 105 வழக்குகள் தேசவிரோதக் குற்றத்துக்காகப் போடப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

இந்தத் தரவுகளின்படி, சராசரியாக வாரத்துக்கு ஒருவர் தேச விரோதக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதில் நான்கு மாநிலங்களிலிருந்து மட்டும் 111 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பிஹாரில் 68 பேரும், ஜார்க்கண்டில் 18 பேரும், ஹரியாணாவில் 15 பேரும், பஞ்சாபில் 10 பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களின் தரவுகள் இல்லாத காரணத்தால், 2016-ல் எண்ணிக்கையில் அவை சேர்க்கப்படவில்லை.

ஐ.ஐ.டி.: 9 சதவீதம் பேர் படிப்பைத் தொடரவில்லை

2016-17 கல்வியாண்டில், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐ.ஐ.டி.) சேர்ந்த மாணவர்களில் 889 (9 சதவீதம்) மாணவர்கள் படிப்பைத் தொடராமல் பாதியில் வெளியேறியிருக்கிறார்கள். சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

முதுகலையில் 630 மாணவர்களும் முனைவர் பட்ட ஆய்வில் 196 மாணவர்களும் இளங்கலையில் 63 மாணவர்களும் கடந்த கல்வியாண்டில் பாதியில் வெளியேறியிருக்கிறார்கள். நாடு முழுவதும் இயங்கும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் உள்ள மொத்த இடங்கள் 9,885. இதில் 73 இடங்கள் நிரப்பப்படவில்லை. 2015-16 கல்வியாண்டில், 656 மாணவர்கள் படிப்பைத் தொடராமல் வெளியேறியிருக்கிறார்.

கடந்த கல்வியாண்டில் இது 35 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. “பொதுத் துறை நிறுவனங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்பு, தனிப்பட்ட விருப்பங்கள் போன்ற காரணங்களால் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் முதுகலை மாணவர்களும் படிப்பைப் பாதியில்விட்டு விலகுகிறார்கள். இளங்கலை மாணவர்கள் தவறான பாடத் தேர்வுகள், மோசமான செயல்பாடுகள் காரணமாகப் படிப்பைத் தொடராமல் விலகுகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அத்துடன், ஐ.ஐ.டி.க்களில் 35 சதவீதப் பேராசிரியர்களுக்கான இடங்கள் நிரப்பபடாமல் இருப்பதும் இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் நாகாலாந்தின் முதல்வரானார் டி.ஆர். ஜெலியாங்

நாகாலாந்தின் முதலமைச்சராக ‘நாகா மக்கள் முன்னணி’ கட்சியைச் சேர்ந்த டி.ஆர். ஜெலியாங், ஜூலை 19-ம் தேதி மீண்டும் பதவியேற்றிருக்கிறார். கடந்த ஐந்து மாதங்களாக அம்மாநிலத்தை ஆட்சி செய்த ஷுர்ஹோஸேலி லியோஸிட்சு, ஜூலை 19-ம் தேதி நடக்கவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வரவில்லை. அதனால் ஆளுநர் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா, டி.ஆர். ஜெலியாங்குக்கு முதலமைச்சராகப் பதவி பிரமாணம் செய்திருக்கிறார்.

வரும் ஜூலை 22-ம் தேதிக்குள், ஜெலியாங் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம், அம்மாநில நகர்ப்புற தேர்தல்களில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கிடு வழங்கியதை எதிர்த்து பழங்குடியினர் குழுக்கள் வன்முறை போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்போதைய முதல்வர் டி.ஆர். ஜெலியாங் பதவி விலக நேரிட்டது. இந்நிலையில், ஐந்து மாத இடைவெளிக்குப்பிறகு, மீண்டும் நாகாலாந்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் அவர்.

உலகின் முதல் குழந்தை கைகள் மாற்று அறுவைசிகிச்சை வெற்றி

அமெரிக்காவைச் சேர்ந்த பத்து வயது சியோன் ஹார்வே என்ற சிறுவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன், உலகிலேயே முதன்முறையாகக் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முக்கியமான அறுவை சிகிச்சை வெற்றி பெற்றிருப்பதாகப் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு, மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு வயதில் செப்சிஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டதால் ஹார்வேயின் கைகளும் பாதங்களும் அகற்றப்பட்டன. இந்தக் கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஹார்வேயால் எழுதவும் சாப்பிடவும் ஆடை அணிந்துகொள்ள முடிவதாகவும் தெரிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

“அறுவை சிகிச்சை முடிந்து பதினெட்டு மாதங்களுக்குப்பிறகு, தற்போது ஹார்வே சுதந்திரமாகச் செயல்படுகிறான். அவனால் அன்றாடச் செயல்களைத் தன்னுடைய கைகளால் செய்யமுடிகிறது. கைகளின் செயல்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்காக அவனுக்கு தினசரி சிகிச்சை கொடுக்கப்பட்டுவருகிறது” என்று சொல்கிறார் பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் சாண்ட்ரா அமரல்.

ரோஜர் ஃபெடரர்: எட்டாவது விம்பிள்டன் பட்டம்

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று புதிய சாதனைப்படைத்திருக்கிறார் ஸ்விட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில், குரோஷியாவின் மரியன் சிலிச்சை எதிர்த்து விளையாடினார் ஃபெடரர். இந்தப் போட்டியில், 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிலிச்சை வீழ்த்தினார் ஃபெடரர்.

இவர் விம்பள்டனில் ஒரு செட்டை கூட இழக்காமல் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. அத்துடன், இது ஃபெடரரின் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று, இதற்குமுன் ஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற வில்லியம் ரென்ஷா, பீட்டர் சாம்பிராஸ் ஆகியோரின் சாதனையை முறியடித்திருக்கிறார் ஃபெடரர். இந்த வெற்றியின் மூலம் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் அவர்.

SCROLL FOR NEXT