கல்வி

வாசித்தால் வளமாகும் வாழ்வு

செல்வ புவியரசன்

உலகப் புத்தக நாள் ஏப்ரல் 23

கணிதம் படிப்பவர்களில் எத்தனை பேருக்கு தத்துவத்தில் ஆர்வமிருக்கும்? உயிரியல் படிப்பவர்களில் எத்தனை பேருக்குப் பொருளாதாரத்தில் ஆர்வமிருக்கும்? பள்ளிக்கூடங்களில் பத்தாண்டுகள் படித்தவுடனே, ஒவ்வொரு மாணவரின் பாடத்திட்டமும் சுருங்கிப்போய்விடுகிறது. விரிவுக்குப் பதிலாக ஆழம். அதுவும் ஒரு வாசிப்பு அணுகுமுறைதான்.

ஆனால், ஒரு பாடப்பிரிவில் முழுமையான கவனத்தைச் செலுத்தும்போது எஞ்சியிருக்கும் துறைகளின் மீதான கவனம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துபோய்விடுகிறது. அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேற முடியாதுதான். ஆனால், அவற்றின் உட்பொருளைக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டிருக்க வேண்டாமா? அதற்கான ஒரு வாய்ப்புதான் புத்தக வாசிப்பு.

ஒரு நல்ல வாசகர் என்பவர் ஏதாவது ஒரு துறையில் ஆழங்கால் பட்டிருக்க வேண்டும். அதேநேரத்தில், இதர துறைகளைப் பற்றிய அறிமுகங்களையும் அவர் கொண்டிருக்க வேண்டும். இரண்டில் எது இல்லையென்றாலும் அவரது வாசகத் தகுதி என்பது கேள்விக்குரியதுதான். துறைகள் சார்ந்த அறிவே இப்படியிருக்கும்போது, வாழ்க்கை சார்ந்த அனுபவப் பாடங்களை எப்படிப் பெறுவது? அங்குதான் இலக்கிய வாசிப்பு கைகொடுத்து உதவுகிறது.

இலக்கியங்கள் அதை எழுதுபவர்களின் அறிவையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு புத்தகத்தின் வழியாகவும் ஒரு பண்பாட்டுப் பரிவர்த்தனை நடக்கிறது. புத்தகத்தை எழுதுபவரும் அதை வாசிப்பவரும் காலதேச வர்த்தமானங்களைக் கடந்து உறவாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வில் அதுவரை சந்தித்திராத மனிதர்களை, அவர்களின் ஊகிக்கவியலாத மனோநிலைகளை, கால் பதித்திராத நிலவெளிகளை, அனுபவித்திராத தட்பவெப்ப நிலைகளை இலக்கியமே வாசகர்களுக்கு எளிதாக அறிமுகப்படுத்திவைக்கிறது. உலகின் மற்ற நிலப்பகுதிகளில் என்னென்ன நடக்கிறது, அங்கு வாழும் மனிதர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அனுபவபூர்வமாக வழங்குகிறது இலக்கியம்.

பிறமொழி இலக்கியங்களைப் படிக்கிறபோது உலகம் கண்முன்னால் விரிகிறது என்றால், தனது மொழியிலேயே இலக்கியம் படிப்பது இன்னொரு அனுபவம். தான் அறிந்த மொழியை, தினந்தோறும் தான் பயன்படுத்தும் மொழியை மற்றவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அதன் சாத்தியங்களையும் இலக்கியமே உணர்த்துகிறது,

காலத்தைத் தாண்டி நீண்டுகொண்டிருக்கும் பண்பாட்டுச் சங்கிலியின் கண்ணிகளில் ஒன்றுதான் நாம் படிக்கும் ஒரு புத்தகம். அது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கப்போகிறது. எனவேதான், பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் யுனெஸ்கோ, புத்தக வாசிப்பைப் பரவலாக்குவதையும் தனது நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கிறது.

2019-ம் ஆண்டை பூர்வீக மக்களுக்கான ஆண்டாக யுனெஸ்கோ அறிவித்திருப்பதால் இந்த ஆண்டுக்கான புத்தகத் தினத்தின் நோக்கத்திலும் அது பிரதிபலித்திருக்கிறது. பூர்வீக மக்கள் தங்களுடைய பண்பாட்டையும் பாரம்பரிய அறிவையும் உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்கு சர்வதேசச் சமூகம் ஆதரவுகாட்ட வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டின் புத்தகத் தினச் செய்தி.

ஆண்டுதோறும் ஏப்ரல் 23- ம் தேதியை உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக யுனெஸ்கோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உலகம் முழுவதும் கொண்டாடிவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வோர் ஆண்டும் ஒரு நகரத்தைப் புத்தகத் தலைநகராகவும் அறிவித்து, அங்கு ஆண்டு முழுவதும் புத்தக வாசிப்பு தொடர்பான தொடர்நிகழ்வுகளையும் நடத்திவருகின்றன. 2019-ம் ஆண்டுக்கான புத்தகத் தலைநகரமாக ஐக்கிய அரபு நாடுகளின் ஷார்ஜா தேர்வுசெய்யப்பட்டுள்ளது. 2020-ல் மலேசியாவின் கோலாலம்பூர்.

1995-ம் ஆண்டில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக ஏப்ரல் 23-ம் தேதியை அறிவித்தது யுனெஸ்கோ. ஆங்கிலக் கவிஞரும் நாடகாசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர், டான் குவிக்ஸாட் நாவலை எழுதிய ஸ்பானிஷ் எழுத்தாளர் மிகேல் செர்வான்டிஸ், பெரு நாட்டைச் சேர்ந்த வரலாற்று எழுத்தாளரான இன்கா கார்சிலோசா டி லா வேகா ஆகியோரின் நினைவுநாள் என்பதால், புத்தக தினமாக ஏப்ரல் 23-ஐத் தேர்வுசெய்திருக்கிறார்கள்.

உலக புத்தக தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் உலகம் முழுவதும் ஒருசேரப் பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல, அனைவருக்கும் புத்தக வாசிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்

SCROLL FOR NEXT