குழந்தைகளின் அக மலர்ச்சியையும் உள எழுச்சியையும் மையமாகக் கொண்டே நமது கல்வி முறை இருக்க வேண்டும் என நாம் சொல்லும்போதே, நடைமுறைக்கு அது சாத்தியமானதா என்ற கேள்வி துருத்திக்கொண்டு எழுகிறது. நம்பிக்கையின்மை துரத்தும் இந்தச் சூழலில்தான் நம்பிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் மாற்று முறைப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
கல்வி மட்டும் விதிவிலக்கா?
அத்தகைய பள்ளிகள் பற்றிய இந்தத் தொடரில் இடம்பெற்ற தகவல்கள் பலருக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை அளித்துள்ளது என்பதைப் பலர் தங்களுடைய கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் வழியாக உணர்த்திவருகின்றனர். இயந்திரமயமான உலகில் எதற்கும் போட்டி, எதிலும் போட்டி. கல்வி மட்டும் விதிவிலக்கா, அதுவும் வியாபாரமாகிவிட்டது.
அரசுப் பள்ளிகளின் இயலாமையால் தனியார் பள்ளிகளின் வசூல் வேட்டையால், கல்வியும் குழந்தைகளும் ஒருங்கே படும் அல்லல்களுக்கு மத்தியில் இத்தகைய பள்ளிகள் சற்று ஆறுதல் அளிப்பதாகச் சிலர் கூறினார்கள். “எங்க ஊர்லயும் இதுமாதிரி பள்ளி இருக்குதா?” என்று சிலர் ஆச்சரியத்தோடும் சந்தேகத்தோடும் கேட்கிறார்கள்.
தமிழ்நாடு மாற்றுக் கல்விக்கான கூட்டமைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் எண்ணற்ற உரையாடல்கள் பற்றி பொதுவில் பேசும் தளமாக இந்தத் தொடர் அமைந்தது. இந்தப் பள்ளிகளின் உயிர்நாடியாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பற்றித் தெரிந்துகொண்டு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் தந்தது.
காரணம் முக்கியம்
மாணவர்களைச் சக மனிதர்களாக மதிக்க இந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பழகியுள்ளனர். மாணவர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர், சேர்ந்து உணவைப் பகிர்ந்து உண்கின்றனர், ஒன்றாக இணைந்து வாசிக்கின்றனர். இவை அந்த ஆசிரியர்களின் இயல்பாகவே மாறிவிட்டது.
மற்ற குழந்தைகளிடம் இருக்கும் எல்லாக் குறைகளும் நிறைகளும் குறும்புத்தனமும் இங்கே படிக்கும் குழந்தைகளிடமும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் இங்கே குழந்தைகள் தண்டிக்கப்படுவதில்லை.
“இதைச் செய்யாதே” என்று சொல்வதால், எந்தப் பழக்கமும் மாறப்போவதில்லை. ஆகவே அந்தச் செயலுக்கான காரணத்தைக் குழந்தைகளுடன் சேர்ந்து யோசித்துக் கண்டுபிடித்து அதைக் களைகிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு மாணவருக்குச் சக மாணவர்களை அடிக்கும் பழக்கம் இருந்தால், அந்தப் பழக்கம் எங்கிருந்து வருகிறது என யோசிப்பதில் தொடங்குகிறார்கள். பள்ளியில் அதற்கான கூறுகள் உள்ளனவா, வசிக்கும் பகுதியில், குடும்பத்தில் என எல்லாச் சூழலையும் முன்வைத்து அது குறித்து மாணவர்களுடன் தொடர் உரையாடலில் ஈடுபடுகிறார்கள்.
மற்ற பள்ளிகளைப் போல இங்கும் கணிதம், மொழித் திறன்கள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. பாடங்கள் ஒன்றென்றப் போதிலும், கற்பிக்கும் முறை மூலமாகப் புதுமையான அனுபவத்தைக் குழந்தைகளுக்கு அவர்கள் அளிக்கிறார்கள். பாடத்துடன் பாடல், கைவினை, தோட்டம், நாடகம் எனக் குழந்தைகளை நடைமுறை வாழ்வுக்குள் உலவவிடுகிறார்கள்.
கற்றல் பரிமாற்றம்
சுற்றுச்சூழல் குறித்த அக்கறை கொண்ட மனிதர்களாக மாணவர்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆண்-பெண் பேதமின்மை, சாதி பாகுபாடின்மை, பிற மதங்களை மதிக்கப் பழகுவது போன்றவை பாடத்துடன் சேர்த்துக் குழந்தைகளின் மனத்தில் பதியம்போடப்படுகின்றன. ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கற்பது,போலவே மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்பது இங்கு இயல்பான செயல்பாடாக அமைந்துள்ளது.
அரச மர இலையில் பீப்பீ ஊதக் கற்றுக்கொடுப்பது, பறவைகளின் வாழ்க்கை முறையை உற்றுநோக்குவது, நியாயம் - அநியாயம் சார்ந்த விவாதங்களில் மாணவர்கள் முன்வைக்கும் கருத்துகளைக் கேட்டறிவது போன்ற செயல்பாடுகளின் மூலமாக இங்கு ஆசிரியரும் மாணவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்கின்றனர், தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
சக மனிதர்கள் சமம்
உள்ளூர் நிகழ்வுகள், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் இங்கே பாடத்துக்கான உதாரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இதன் மூலம் படிப்பில் இருந்து மாணவர் அந்நியப்பட்டுப்போவதைத் தடுக்க முடிகிறது. அது மட்டுமின்றி சக மனிதர்களைச் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வியலை உற்றுப் பார்த்து அவர்களிடமிருந்து கற்க வேண்டியவற்றை அறியச்செய்தல், பானை செய்தலையும் தச்சுத் தொழிலையும் பாடமாக்குதல் போன்ற திட்டங்கள் கல்வியின் நோக்கத்தை மாணவர்களுக்குப் புரியவைக்கின்றன.
சமூகத்தில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக அந்தப் பள்ளிகளின் செயல்பாடுகள் உள்ளன. இன்றைய சமூகத்தை மாற்றும் சக்தியாகவும் எதிர்காலச் சமூகத்தை வளர்த்தெடுக்கும் கூறுகளாகவும் இந்தப் பள்ளிகள் கல்வியை மாற்றியுள்ளன. இனியும், இவ்வகையான கல்வியைச் சாத்தியமற்றதாக எண்ண வேண்டிய அவசியமில்லை. அங்குப் படிக்கும் குழந்தைகளின் மனங்களில் அவர்கள் ஏற்படுத்தும் மறுமலர்ச்சியே அதற்குச் சான்று.
கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com