வணக்கம், என் பெயர் முத்துமாரி. நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். எங்கள் வீட்டில் ஒரு நாள் வேலை கிடைத்தால் தான் அன்றைய இரவு உணவு உறுதி. அம்மா மாடுகளை மேய்த்தும், சிறுசிறு வேலைகளும் செய்து எங்களை வளர்த்தார். எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு கனவு — வக்கீல் ஆகணும். ஆனால் அந்த கனவுக்குத் திசை காட்ட யாரும் இல்லை. வழிகாட்டுதல் இல்லாமல், பின்புலம் இல்லாமல், எனது வீட்டின் சுவரில் “BA BL – LLB” என்று கிறுக்கி எழுதிக்கொண்டே அந்த கனவை உயிரோடு வைத்திருந்தேன்.
பத்தாம் வகுப்பு முடிந்ததும், குடும்ப சுமைகள் என்னை படிப்பை விட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் செல்லத் தள்ளியது. அந்த நாட்களில் நான் தினமும் கடையில் வேலை செய்தபோது மனசுக்குள் ஒரு கேள்வி மட்டும் - “என் கனவு இங்கேயே முடிந்துவிடுமோ?” ஆனால், உள்ளுக்குள் நம்பிக்கை இருந்தது. எனவே மீண்டும் படிக்க முயன்றேன்.
பன்னிரெண்டாம் வகுப்பில் சயின்ஸ் குரூப் எடுத்தேன். கடுமையாக உழைத்து 510 மதிப்பெண் பெற்றேன். ஆனாலும், கல்லூரிக்கு செல்ல பணம் இல்லை. ஒரு வருடம் முழுவதும் வீட்டிலேயே இருந்தேன் - அம்மாவுடன் மாடு மேய்த்தேன், வீட்டு வேலை செய்தேன், நண்பர்கள் எல்லோரும் கல்லூரிக்கு போகும் போது மனசு உடைந்தது. அந்த நேரத்தில் என் பள்ளி ஆசிரியர் “நான் முதல்வன் - உயர்வுக்கு படி” திட்டத்தை பற்றி சொன்னார். அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையை மாற்றின. தென்காசியில் நடந்த முகாமில் கலந்து கொண்டேன். அடுத்த நாளே கல்லூரி சேர்க்கை கிடைத்தது. அதோடு புதுமை பெண் திட்டமும் எனக்கு துணையாக இருந்தது.
இப்போது நான் கல்லூரி மாணவியாக இருக்கிறேன். ஒவ்வொரு காலை கல்லூரி போகும்போது மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி - “நான் சாதிக்கிறேன்… என் கனவு உயிரோடு இருக்கிறது!” நான் முதல்வன் திட்டம் என் வாழ்க்கையை முழுவதும் மாற்றிவிட்டது. என் கனவுகளுக்கு சிறகளித்த இந்த அருமையான திட்டத்தை உருவாக்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. இன்று நான் ஒரு கல்லூரி மாணவி — ஆனால் நாளை ஒரு வக்கீல் ஆகப்போகிறேன். இதற்கு நான் முதல்வன் திட்டம் காரணம்.
வெற்றி நிச்சயம் திட்டம்: என் பெயர் ஆன்டனி பவுன்.S, வயது 40. நான் கொடுங்கையூரில் வசித்து வருகிறேன். அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். என் தந்தை விவசாயி. அவர் மறைந்த பின், என் தாயார் பல சிரமங்களை எதிர்கொண்டு என்னை வளர்த்தார். படிப்பை முடித்த பிறகு, நான் ஆட்டோ ஓட்டுநராக இருந்த சிவகுமாரை மணந்தேன். அவர் என்னை வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுக்க ஊக்குவித்தார். அவரின் ஆதரவால், நான் LMV உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்று ஆட்டோ ஓட்டத் தொடங்கினேன். ஆனால், அதில் போதுமான வருமானம் இல்லை. அந்த நேரத்தில், என் வாழ்க்கை ஒரு மாற்றத்திற்காக காத்திருந்தது.
அப்போது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் செயல்படுத்தும் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், PSTC (Parveen Group) நிறுவனம் வழங்கிய கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் (HMV) பயிற்சி குறித்த விளம்பரத்தை கண்டேன். உடனே ரெட்ஹில்ஸ் PSTC அகாடமிக்கு சென்று, இந்த கட்டணமில்லா திறன் பயிற்சி பற்றிய விவரங்களை அறிந்தேன். என் உடல் அமைப்பு மெலிந்தும், உயரம் குறைவாக இருந்ததன் காரணமாக முதலில் அவர்கள் பயிற்சி தர தயங்கினார்கள்.
ஆனால் நான் உறுதியுடன், “இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி வேலை செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தேன். தேர்வு மற்றும் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றபின், எனக்கு பயிற்சியில் சேர அனுமதி வழங்கப்பட்டது. அங்கு நான் - Theory வகுப்புகள், சிமுலேட்டர் பயிற்சி, யோகா மற்றும் உளவியல் அடிப்படைகள், சுகாதாரம் மற்றும் சுத்தம், வங்கி மற்றும் நிதி விழிப்புணர்வு, சாலை ஓட்டுநர் பயிற்சி என பல்வேறு துறைகளில் அறிவும் திறனும் பெற்றேன்.
அப்போது தான், “ஓட்டுநர் தொழில் என்பது சாதாரணம் அல்ல; அது பொறுமையும் ஒழுக்கமும், சாலை பாதுகாப்பு அறிவும், நேரக் கட்டுப்பாடும் தேவைப்படும் ஒரு திறமையான பணி” என்பதை உணர்ந்தேன். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, HMV உரிமம் பெற்றேன். பின்னர், PSTC நிறுவனத்தின் வாயிலாக Travel Lite Companyயில் மின்சார பேருந்து ஓட்டுநராக வேலை கிடைத்தது.
பணி நியமன விழாவில், நம் மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களிடம் நேரடியாக வாழ்த்து பெற்றது என் வாழ்வின் மிகப்பெரும் வெற்றிகரமான மற்றும் மறக்கமுடியாத தருணமாக இருந்தது. இன்று, நான் மின்சார பேருந்து ஓட்டுநராகச் சிறந்த ஊதியத்துடன் பணிபுரிந்து, என் குடும்பத்திற்கு வலுவான ஆதரவாக நிற்கிறேன். இந்த மறக்க முடியாத வெற்றிப் பயணத்திற்கு காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மற்றும் PSTC குழுவிற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.