சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் பிப். 17-ல் தொடங்கி ஏப். 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்விஆண்டுக்கான பொதுத் தேர் வுக்கு மாணவர்கள் தயாராக ஏதுவாக, தற்காலிக தேதி பட்டியலைசிபிஎஸ்இ கடந்த செப். 2-ம் தேதி வெளியிட்டது.
இந்த நிலையில், பள்ளிகளின் வேண்டுகோளை ஏற்று, அதில் சில திருத்தங்கள் செய்து இறுதி தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்.17-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதி முடிவடையும். அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.15-ல்
தொடங்கி ஏப்.9-ம் தேதி முடிவடையும். தேர்வுகள் காலை அமர்வில் 10.30 மணி முதலும், மதிய அமர்வில் 1.30 மணி முதலும் தொடங்கும்.
விரிவான தேர்வுக் கால அட்டவணையை www.cbse.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பாகவே அட்டவணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கு மட்டும் இந்த கல்வி ஆண்டு முதல் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்ட தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்க உள்ள நிலையில், 2-ம் கட்ட தேர்வுகளை மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.