என் பெயர் கவ்யா ஸ்ரீ. நான் சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் முதல்வன் நிரல் திருவிழா திட்டத்தின் மூலம் ஒரு புதுமையான படைப்பை உருவாக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குழு தமிழ்நாட்டின் கோயில்களை விஆர் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் அனுபவமாக மாற்றும் திட்டத்தை உருவாக்கினோம்.
இந்த திட்டத்தின் நோக்கம் - வரலாற்று சிறப்புமிக்க கோயில்களையும் பாரம்பரிய கட்டிடங்களையும் 3டி வடிவில் காட்சிப்படுத்தி, அவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அனுபவமாக வழங்குவது. இதற்காக Gaussian Sampling மற்றும் Polycam போன்ற நவீன 3டி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு கட்டிட வடிவமைப்பும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயிலின் இயல்பான ஒலி சூழல், பல மொழிகளில் வழிகாட்டும் ஏஐ தொழில்நுட்பம், வரலாற்று தகவல்களை வழங்கும் இன்டராக்டிவ் பேனல்கள் என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் மொத்தம் 15,000-க்கும் மேற்பட்ட புத்தாக்க யோசனைகள் நிரல் திருவிழா போட்டிகளுக்காக சமர்ப்பிக்கபட்டன. அவற்றில் எங்கள் யோசனை சிறந்த 1,000 யோசனைகளில் இடம்பிடித்து, ரூ10,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. இது எங்கள் குழுவுக்கு ஒரு பெரும் ஊக்கமும் அங்கீகாரமும் ஆகும்.
இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய நான் முதல்வன் திட்டத்திற்கும், இந்த முயற்சியை ஊக்குவித்த தமிழ்நாடு அரசிற்கும் இதயப்பூர்வமான நன்றி. இந்த திட்டம் எங்களைப் போல மாணவர்களை புத்தாக்க செயல்முறைகளில் ஈடுபட பெறிதும் ஊக்குவிக்கிறது.