திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பாம்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திக்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கிராமத்தில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வர வேண்டுமென்றால் அங்குள்ள பாம்பாற்றை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பழைய அத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நகர் பகுதிக்கு வந்து செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீரானது பாம்பாற்றின் வழியாக கரைபுரண்டு ஓடுவதால் பழைய அத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆற்று வெள்ளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பழைய அத்திக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “பாம்பாற்றை கடந்து செல்ல உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என தலைமுறை, தலைமுறையாக கோரிக்கை மனு அளித்து வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கை பல ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே உள்ளது.
ஆண்டியப்பனூர் அணை எப்போதெல்லாம் நிரம்புகிறதோ, அப்போதெல்லாம் எங்களால் நகர் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பாம்பாறு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராதா (45) என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உடலை சுமந்து நாங்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து சென்று தான் அடக்கம் செய்தோம். இப்படி, விவசாயம், கல்வி, தொழில், வர்த்தகம் என பல்வேறு தேவைகளுக்காக எங்கள் கிராமத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பத்தூர் நகரை அடைய மழைக்காலங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் சவாலுக்கு அளவே இல்லை.
எங்கள் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாங்கள் ஏறாத அரசு அலுவலகங்கள் இல்லை. பார்க்காத அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் இல்லை. ஆனால், எங்கள் கோரிக்கையானது எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை. பொதுமக்களின் நிலை அறிந்து மாவட்ட நிர்வாகம் உடனடி யாக பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் ஒன்றை அமைத்து தரவேண்டும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கை’’ என்றனர்.