புனே: மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் நிதின் எஸ்.தர்மாவத். அவரது மகன் அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் சமூக வலைதளத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில், ‘‘பள்ளிகள் பயனற்றவை. தற்போது நள்ளிரவு 12 மணி ஆகிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் எனது மகன் ஹோம்வொர்க் பாடங்களை முடித்துவிட்டு ‘புராஜெக்ட்’ என்ற பெயரில் ஏதோ முட்டாள்தனமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
இதை செய்து முடித்தால்தான் உடற்கல்வி வகுப்புக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் 12.30 வரை விழித்திருந்து எனது மகன் ‘புராஜெக்ட்’களை செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு தந்தையாக என்னால் எதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அழுகிப் போன அமைப்பால் எனது இயலாமையை உணர்கிறேன். நான் எதற்கு எதிராக போராடினேனோ, இப்போதும் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்றார். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.