கல்வி

கனவுகள் விழித்தெழ வைக்கும்! - கலாம் சிந்தனைகள்

மாயா

‘தூக்கத்தில் காண்பது கனவல்ல; நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்று சொன்னவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். ’கனவு உலகத்தில் வாழ்ந்தால் நனவுலகம் நழுவிப் போகும்’ என்று கூறப்பட்ட காலக்கட்டத்தில், தான் கண்ட கனவுகளின் கைபிடித்து நடை போட்டு வெற்றிகளை அள்ளியவர் கலாம்.

கனவுகளை லட்சியங்களுக்கான விதைகளாகவும் கண்டறிதல்களுக்கான தொடக்கப்புள்ளிகளாகவும் நோக்கியவர் கலாம். விண்வெளி அறிவியலில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பல துறைகளுக்கும் பொருத்த மானதாக அமைந்தன கனவுகள் குறித்த கலாமின் கருத்துகள்.

’கனவு காணுங்கள்; கனவுகள் எண்ணங்களாக மாறும்; எண்ணங்கள் செயல்களாக உருப்பெறும்’ என்ற அவருடைய வார்த்தைகளைத் தாரக மந்திர மாகப் பின்பற்றுகின்றனர் அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள். விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கலைஞர்கள், சாதாரண மக்கள் என அனைவரையும் ஈர்த்துள்ளது கலாமின் ‘கனவு காணுங்கள்’ எனும் சிந்தனை.

அதே மாதிரி, ஒவ்வொருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதையும் கலாம் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்திருக்கிறார். நாட்டின் கடைக்கோடிப் பகுதியில் ஓர் ஏழைப் படகோட்டியின் மகனாகப் பிறந்து, எந்தப் பின்புலமும் இன்றி டிஆர்டிஓ, இஸ்ரோ போன்ற மத்திய நிறுவனங்களில் பணியாற்றியதும் குடியரசுத் தலைவர் மாளிகையில் வாழ்ந்ததும் அவருடைய கனவுகளின், லட்சியங்களின் வெளிப்பாடுதான்.

வாழ்வில் எத்தகைய நிலையை அடைய வேண்டும் என்று தன்னைக் குறித்த கனவுகளைத் தாண்டி, நாட்டின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குச் சிந்தனையும் அவரிடத்தில் இருந்தது. ‘சுதந்திரம்’ அவற்றில் முதன்மையானதாக இருந்தது. ’மூவாயிரம் ஆண்டுகளாகப் பல படையெடுப்புகளைச் சந்தித்த போதிலும், வேறு எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்து தனதாக்க வேண்டும் என்கிற எண்ணம் இந்தியாவிடம் எப்போதும் இருந்ததில்லை. அங்குள்ள மக்களின் சுதந்திரத்தை நசுக்க விரும்பியதில்லை. அந்தச் சுதந்திரத்தை நாட்டு மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்திட வேண்டும்’ என்பது கலாமின் சிந்தனைகளில் ஒன்று.

‘வளர்ச்சி’ என்பது அவரின் இரண்டாவது பெருவிருப்பம். 50 ஆண்டுகள் ஆன பின்னும் ‘வளர்ச்சி யுறுகிற நாடாக’வே இந்தியா அடையாளம் காணப்பட வேண்டுமா என்பது அவரது கேள்விகளில் முதன்மை யானது. ‘தன்னிறைவும் சுயசார்பும்’ மிக்க நாடாக இந்தியா திகழ்வதற்கான நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

மூன்றாவதாக, உலகின் முதன்மையான நாடாக இந்தியா உயர வேண்டும் என்று விரும்பினார் கலாம். பொருளாதாரம், பாதுகாப்புப் படைகளின் பலம், உற்பத்தி துறை வளர்ச்சி எனப் பல அம்சங்களில் நாடு முதலிடம் பெற வேண்டும் என்றும், வலுவான நாடாக அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் எண்ணினார்.

சுருக்கமாக, வல்லரசாக இந்தியா திகழ வேண்டும் என்றார். வெறுமனே வளர்ச்சித் தரவுகள் அடிப்படையில் இல்லாமல், மக்களின் நலவாழ்வு உள்படப் பல அம்சங்கள் அதில் அடங்கியிருக்க வேண்டும் என்று கனவு கண்டார் கலாம்.

| அக்.15 - அப்துல் கலாம் பிறந்தநாள் |

SCROLL FOR NEXT