காட்டாங்கொளத்தூர்: தொழில் முனைவோராக செயல்பட்டு மாணவர்கள் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 21-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிறுவன வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, எஸ்ஆர்எம் நிறுவனர் மற்றும் வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.
துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றி ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்தார். சிறப்பு விருந்தினராக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் மனிதநேயம், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், மேலாண்மை, சட்டம் மற்றும் வேளாண் அறிவியல் ஆகிய பிரிவுகளில் முனைவர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 15,105 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பாரத் பாஸ்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியது: பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன். மாணவரின் வெற்றிக்கு உறுதியாக இருந்த பெற்றோரை வாழ்த்துகிறேன். எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது.
பட்டம் பெற்ற மாணவர்களாகிய நீங்கள் பொறுப்புள்ள குடிமகனாக இருப்பது மிக முக்கியம். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். இந்தியாவில் தான் திறமை வாய்ந்த பொறியாளர்கள் ஏராளமாக உள்ளனர். பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம் ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியம். நம்முடைய கலாச்சாரத்தால் உலக அளவில் நாம் உயர்ந்து நிற்கிறோம்.
அறிவு மட்டுமின்றி கலாச்சாரமும் முக்கியம். சமூக சூழல் பலரை மாற்றுகிறது. சமூகப் பொறுப்பு மாணவர்களுக்கு முக்கியம். நம்முடைய மருத்துவர்கள், பொறியாளர்களுக்கு உலக அளவில் நல்ல மரியாதை உள்ளது. ஏபிஜே டாக்டர் அப்துல் கலாம் போன்று, மாணவர்கள் சாதனை புரிய வேண்டும்.
பட்டம் பெறுவது முக்கியமல்ல அனைவரும் தொழில்முனைவோராக செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் இணை வேந்தர்கள் ரவி, சத்யநாராயணன், எஸ்ஆர்எம் வளாக தலைவர் சிவகுமார், ராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்ஆர்எம் வளாக இணை தலைவர் நிரஞ்சன், தேர்வு கட்டுப்பாட்டாளர் குணசேகரன், பதிவாளர் பொன்னுச்சாமி பங்கேற்றனர்.