சென்னை: பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 118 இணைப்புக் கல்லூரிகளும், 37 தன்னாட்சி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் பட்டப் படிப்பையோ அல்லது பட்டமேற்படிப்பையோ முடிக்கும் மாணவர்களுக்கு அனைத்து செமஸ்டர் மதிப்பெண்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், புரவிஷனல் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டு காலமாக மதிப்பெண் சான்றிதழ்கள், புரவிஷனல் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால், படிப்பை முடித்த மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, நிதி நெருக்கடி காரணமாகத்தான் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சான்றிதழ்களை வழங்க முடியவில்லை. பல்கலைக்கழக நிதிக்குழு, எழுதுபொருள் மற்றும் அச்சு செலவினங்களுக்கான நிதியை குறைத்துவிட்டது" என்றனர். பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜாண் கூறும்போது, " இதுவரை மதிப்பெண் சான்றிதழ், புரவிஷனல் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு வழங்குவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம்" என்றார். அதேபோல், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சி.அருள்வாசு கூறுகையில், "முதுகலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுவிட்டன. இளங்கலை மாணவர்களுக்கு சான்றிதழ் அச்சிடும் பணியும் தொடங்கப்பட்டு விட்டன" என்றார்.