படம்.ஜெ.மனோகரன் 
கல்வி

“முற்போக்கான விஷயங்களை கற்றுத் தரும் இடம்தான் பள்ளிக்கூடம்” - அமைச்சர் அன்பில் மகேஸ்

செய்திப்பிரிவு

பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவையில் மாநில அளவிலான அடைவு ஆய்வு, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாகத் தேர்வு பெறுவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட வட்டங்கள், தேர்ச்சி விகிதம் குறைந்த வட்டங்கள் எவை என்று கண்டறிந்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சூலூர், தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மாணவர்கள் எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்யாமல், புரிந்துகொண்டு தேர்வு எழுத வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இந்த கூட்டத்தை முடித்த ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு நாங்கள் முன்னேறியிருப்போம் என்று உறுதி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவை வளர்ப்பதற்காக 850 கணினி ஆய்வகங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதற்கான பணிகளை நிதித்துறை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட ஆய்வகங்களுக்காகவும், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் கற்றுக் கொடுக்கத் தேவையான கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மத்திய அரசு எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு வழங்க வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. தமிழக அரசு ரூ.700 கோடியை ஒதுக்கியுள்ளது. அதேபோல் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக் காக மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய ரூ.600 கோடி நிதியை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசு தனது பங்களிப்பை வழங்கிவிட்டால் உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான போர்ட்டல் செயல்படும். பள்ளிக்கூடம் என்பது அறிவுசார்ந்த இடமாகவும், முற்போக்கான விஷயங்களை கற்றுக் கொடுக்கும் இடமாகவும் உள்ளது. நீட் தேர்வில் தாலியைக் கூட கழற்றி வைத்துவிட்டு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தியபோது மவுனமாக இருந்தவர்கள் இப்போது வேறுவிதமாக பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT