கல்வி

கலைத் திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் மே 19 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் 2022-23-ம் ஆண்டு முதல் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலைத் திறமைகளை மேலும் மேம்படுத்தும் விதமாகவும், அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

அதன்படி ஓவியம், சிற்பம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றில் சிறந்த வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு மே 19 முதல் 24-ம் தேதி வரை 6 நாட்கள் பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்பட இருக்கிறது.

இதில் கலந்து கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு உரிய தகவலை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும். அந்த மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT