கல்வி

சென்னை ஐஐடி 66-வது ஆண்டு விழா: இஸ்ரோ முன்​னாள் தலை​வருக்கு சாதனை​யாளர் விருது

செய்திப்பிரிவு

சென்னை: ஐஐடி ஆண்டு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத் உட்பட 12 முன்னாள் மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சென்னை ஐஐடியின் 66-வது ஆண்டுவிழா ஐஐடி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஐஐடி முன்னாள் மாணவரும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலருமான சிவகுமார் கல்யாணராமன் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, ``ஐஐடியில் நிலவும் ஆராய்ச்சி சூழலைப் பார்த்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் நிறுவனம் உயர் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தனியார் துறையினர் அதிக முதலீடு செய்ய உந்து சக்தியாகத் திகழ்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களும் இத்துறையில் அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தலைமை தாங்கிப் பேசுகையில், ``நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் ஐஐடி மாணவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளில் சேர வேண்டும். அதற்கேற்ப ஐஐடி மாணவர்களை யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளோம்'' என்றார்.

விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத் உட்பட 12 முன்னாள் மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த பேராசிரியர்களும், சிறந்த மாணவர்களும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT