கல்வி

மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம்: ஏப்.25 முதல் மே 15-ம் தேதி வரை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: மாணவ, மாணவிகளுக்கு பேட்மிண்டன், நீச்சல், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் கோடைகால இலவச பயிற்சி முகாம் சென்னையில் வரும் ஏப்.25 முதல் மே 15-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மாவட்டத்துக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வரும் ஏப்.25 முதல் மே.15-ம் தேதி வரை 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் காலை, மாலை என இரு வேளைகளும் தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

நேரு பூங்காவில் அமைந்து சென்னை மாவட்ட விளையாட்டு அரங்கில் - தடகளம், பேட்மிண்டன்; செனாய் நகரில் - நீச்சல், பேட்மிண்டன்; முகப்பேர் விளையாட்டு அரங்கில் - பேட்மிண்டன், கூடைப்பந்து; கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் - குத்துச்சண்டை; பெரியமேடி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் - தடகளம், ஜூடோ, கையுந்து பந்து, பளுதூக்குதல், குத்துச்சண்டை; உள் விளையாட்டு அரங்கில் - கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், குத்துச்சண்டை ஆகியவை நடத்தப்படுகின்றன.

அதேபோல் ஏஜிபி விளையாட்டு அரங்கில் - பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல்; எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் - ஹாக்கி; நுங்கம்பாக்கம் விளையாட்டு அரங்கில் - டென்னிஸ்; புதூர் மாணவர் விளையாட்டு விடுதியில் - கிரிக்கெட் என கோடைகால பயிற்சி முகாமில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு இந்த விளையாட்டுகள் நடத்தப்படும். இதில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி இலவசம். சான்றிதழ்களும் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 7401703480 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT