சென்னை: போட்டித் தேர்வுகளில் இலக்கை நோக்கிய பயணமும் ஆளுமைத் திறனும் வெற்றியை தேடித்தரும் என்று ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என்ற ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். இவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கத்தில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான காவல்துறை கண்காணிப்பாளர் (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு) ஏ.மயில்வாகனன் பேசியதாவது: சிவில் சர்வீஸ் பணியை பொறுத்தவரை முன்தயாரிப்பு, தேர்வு நடைமுறை, பணியில் சேருதல் மற்றும் சேவையாற்றுதல் ஆகிய 4 படிகள் உள்ளன.
தற்போது நீங்கள் முதல்நிலையில் இருக்கிறீர்கள். போட்டித் தேர்வில் வெற்றிபெற எந்த தகுதியும், பின்னணியும் முக்கியமில்லை. விடாமுயற்சியுடன் போராடினால் நீங்கள் அனைவரும் வெற்றி பெறலாம். தேர்வுக்கு தயராகும்போது பாடங்களை முழுமையாக உணர்ந்து படித்தால் எளிதில் மறக்காது. உங்களுக்குள் இருக்கும் சிறந்த திறன்களைக் கண்டறிந்து வெளிக்கொணர வேண்டும்.
நீங்கள் விரும்பும் இடத்தை அடைய அதற்கான உழைப்பை கொடுத்தால் அவை கைகூடும். சில சமயங்களில் நீங்கள் விருப்பத்துக்கு மாறாக வேறு பதவி கிடைத்தால் முழு மனதுடன் அதை ஏற்க வேண்டும். வாழ்வில் இயற்கை நமக்கு வழங்குவதை ஒதுக்காமல் அதில் திறம்பட செயல்பட வேண்டும். கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் தயக்கம், அச்ச உணர்வுகளை உடைத்து சவால்களைப் போர்க்குணத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் அடுத்தகட்டத்துக்கு முன்னேற முடியும். உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் உடல் நலத்திலும், ஆரோக்கியத்திலும் முறையாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
வருமானவரித் துறை ஆணையர் வி.நந்தகுமார் பேசியதாவது: சிறுவயதில் நான் கற்றல் குறைபாடு கொண்டவனாக இருந்தேன். படிப்பை பாதியில் விட்டுப் பணிக்குச் சென்றேன். ஆனால், ஆளுமைத் திறன் உதவியுடன் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இலக்கை நோக்கிய பயணமும், ஆளுமைத் திறனும் வெற்றியைத் தேடித் தரும். யுபிஎஸ்சி தேர்வெழுத முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் சரியான வழியில் செல்வதற்கான சூழல்களை இயற்கை நமக்கு எடுத்துரைக்கும். மற்றவர்களை ஒப்பிடாமல் உங்களுடன்தான் நீங்கள் போட்டியிட வேண்டும்.
உங்களின் கனவை நோக்கி பயணிக்க வேண்டும். தொடர் முயற்சிகள்தான் வெற்றிக்கு வித்திடும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு முதலில் சமுதாய நலனுக்கானதை செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்க வேண்டும். நேர்காணலின்போது உங்களின் ஆளுமைத் திறனே மதிப்பிடப்படும். அதனால் வாழ்வில் தேடல் முக்கியமானது. கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல், அதில் நமது தனித்துவதிறமையை நிரூபிக்க வேண்டும்.
வாய்ப்பென்பது அடிக்கடி நமக்கு கிட்டுவதில்லை. ஒரே ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பிலும் நாம் சாதிப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. யாரோடும் உங்களை ஒப்பிடாமல், உங்களால் நிச்சயம் முடியும் என்கிற நம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொண்டால் நாளைய வெற்றியாளர் நீங்கள் தான். இவ்வாறு அறிவுறுத்தினார்.
இதேபோல் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்ய பூமிநாதன் பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்தாலும் 5 லட்சம் பேர் தேர்வுக்கு வரமாட்டார்கள். அதிலும் 2 முதல் 3 லட்சம் பேர் தேர்வு அனுபவத்துக்காக மட்டுமே வந்து செல்வர். சுமார் 30 ஆயிரம் பேர்தான் தீவிரமான ஆர்வத்துடன் தேர்வு எழுதுவர். அதில் ஒருவராக நீங்கள் இருந்தாலே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம். எனவே இதில் கடும் போட்டி நிலவும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம்.
தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்தால் அதில் 17 லட்சம் பேர் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருப்பர். ஆனால், யுபிஎஸ்சி தேர்வுக்கு 20,000 பேர்தான் விண்ணப்பிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவே இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
`இந்து தமிழ் திசை' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, ‘யுபிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உள்ளது. ஆனால், அதற்கான முயற்சியும் பயிற்சியும் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. அப்படியான மாணவர்களுக்கு வழிகாட்டவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
யுபிஎஸ்சி போட்டித் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது குறைந்து கொண்டே வருகிறது. முன்னிலும் அதிகமாக தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றிபெற்று, அரசு உயர் பதவிகளுக்குச் செல்ல வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இத்தகைய முயற்சியை முனைப்போடு முன்னெடுத்து வருகிறது” என்றார்.
இந்நிகழ்வில் எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வரும் செயலாளருமான எஸ்.உமாகவுரி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஹரிநாராயண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதிலளித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு முன்னதாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இலவச பயிற்சியும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.