மதுரை: சென்னையில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியின் கிளை அமைக்க உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு அருகே போதுமான இடத்தை ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் சீர்மிகு சட்டப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த சட்டப் பள்ளியின் கிளையை மதுரையில் அமைக்கக் கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முது்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மாணவ, மாணவிகளுக்கு தரமான சட்டக் கல்வி வழங்கும் நோக்கத்தில் சென்னையில் சீர்மிகு சட்டப் பள்ளி தொடங்கப்பட்டது.
சீர்மிகு சட்டப் பள்ளி சென்னையில் மட்டுமே உள்ளது. இப்பள்ளியில் தென் மாவட்ட மாணவர்கள் சேர்வதற்கு அதிக செலவு மற்றும் கால விரயமும் ஏற்படுகிறது. எனவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் சீர்மிகு சட்டப் பள்ளியின் கிளையை தொடங்க அரசுக்கும், சட்டப் பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், சென்னை சீர்மிகு சட்டப் பள்ளியின் கிளையை மதுரையில் அமைப்பது தொடர்பாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர், வழக்கறிஞர் முத்துகுமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தென் மாவட்டங்களின் உள்ள மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் செயல்பட்ட வரும் சீர்மிகு சட்டப் பள்ளியின் கிளையை மதுரையில் தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு அருகே இடம் ஒதுக்கக் கோரி மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் மதுரையில் விரைவில் சீர்மிகு சட்டப் பள்ளி அமையும் என்று வழக்கறிஞர் முத்துக்குமார் கூறினார்.