கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு பிஎச்டி அல்லது செட் , நெட் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம். மாநில அளவிலான செட் தகுதித்தேர்வை மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது தேர்வு வாரியம் நடத்தும். அந்த வகையில், செட் தேர்வு நடத்துவதற்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அப்பல்கலைக்கழகம் செட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்றது. 99,178 முதுநிலை பட்டதாரிகள் செட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
பின்னர் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து, செட் தேர்வு மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை கணினிவழியில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.27-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு கணினிவழி செட் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 133 தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்கள் காலை, பிற்பகல் என 2 அமர்வுகளில் தேர்வெழுதினர். 4 நாட்கள் நடைபெறும் செட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது.