மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்தலில் தாமதம் ஏற்படுவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறப்பு ‘கவனிப்புக்கு’ உடனடி அங்கீகாரம் கிடைப்பதாக அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
மதுரை வருவாய் மாவட்டத்தில் மேலூர், மதுரை ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மதுரை கல்வி மாவட்டத்தில் 45 பள்ளிகள், மேலூர் கல்வி மாவட்டத்தில் 41 பள்ளிகள் உட்பட மொத்தம் 86 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும். கடைசியாக 2022-ம் ஆண்டு அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டது.
அதன்படி 2025-ம் ஆண்டு அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும் என்பதால் அந்தந்த கல்வி மாவட்டங்களில் விண்ணப்பித்துள்ளனர். அங்கீகாரம் புதுப் பித்தால்தான் அப்பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத முடியும். இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 5-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 25-ம் தேதியும் தொடங்குகிறது.
தேர்வுகள் நெருங்குவதால் அங்கீகாரமின்றி மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்டு சில பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், அரசுப் பள்ளிகளைப் போன்றுதான் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசுப்பள்ளிகள் தொடங்கு வதற்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அரசு உதவிபெறும் பள்ளிகள் கல்விச் சேவை ஆற்றின.
அத்தகைய பள்ளிகளிடம் தற்போது அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு பள்ளிக் கல்வித்துறையில் பணத்தை எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்திலுள்ள 86 பள்ளிகளில் தற்போது 7 பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் புதுப்பிக்கப் பட்டுள்ளது. மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் சாக்கு போக்கு கூறி வருகின்றனர். இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு மீது மிகுந்த அதிருப்தி நிலவுகிறது.
தேர்வுகள் நெருங்குவதால் தாமதமின்றி அங்கீகாரம் புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் ரேணுகாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.