மாணவர்கள் | கோப்புப் படம் 
கல்வி

மத்திய அரசின் NMMS கல்வி உதவித்தொகை: பிப். 17-ல் ஹால்டிக்கெட் வெளியீடு

சி.பிரதாப்

சென்னை: என்எம்எம்எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள் மற்றும் ஹால்டிக்கெட்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

இதுதவிர மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும்.

இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT