சென்னை: டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் வெற்றிபெற்று சிறப்பிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் பங்கேற்ற தமிழக தேசிய மாணவர் படையினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, குடியரசு தின விழா அணிவகுப்பில் அகில இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்த தமிழக தேசிய மாணவர் படையினருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் ரயில் மூலம் செல்வதற்கு 3 முதல் 6 நாட்களாகும். இதனால் மாணவர்கள் சோர்வடைவதாகவும், இந்த முறை மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழக அரசின் சார்பில் ரூ.28 லட்சம் செலவில் 129 தேசிய மாணவர் படை மாணவர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேபோல் திமுக ஆட்சியில் தேசிய மாணவர் படையில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.14 லட்சத்தில் இருந்து ரூ.28 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய மாணவர் படைக்கான நிரந்தர முகாம் அமைக்கவும், திருச்சி மாவட்டம் சோலையூரில் என்சிசி பயிற்சி முகாம் அமைக்கவும் தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவை தொடங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி, “சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலைக்கு நடந்த அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிச்சயமாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தொடர்ந்து பெரியாரை பற்றி அவதூறாக பேசிவரும் சீமானைப் பற்றி நான் பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் என்சிசி இயக்குநர் வக்கீல் குமார், துணை இயக்குநர் ஜெனரல் கமோடர் எஸ்.ராகவ், சென்னை குழு கமேண்டர் பி.ஜி.பிரபு, விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.