கல்வி

சென்னையில் உள்ள 417 மாநகராட்சி பள்ளிகளிலும் ஆண்டு விழா: முதல் விழாவை சர்மா நகரில் மேயர் பிரியா தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் கடந்தாண்டு நிதி நிலை அறிக்கையில், சென்னையில் உள்ள அனைத்து சென்னைப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படும் என்ற அறிவிப்பின்படி, சர்மா நகரில் முதல் விழாவை மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், "சென்னையில் உள்ள அனைத்து சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களால் திட்டமிடப்பட்டு ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்தப்படும்.

இந்த விழாவில் மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் முன்னேற்றம், பள்ளியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு, பள்ளியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டுவார்கள்" என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 2025-ம் கல்வியாண்டிற்கான ஆண்டு விழா சென்னை மாநகராட்சியின் 417 சென்னை பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடங்கி வைக்கும் விதமாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36, சர்மாநகர் சென்னை உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழாவை மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மேயர் வழங்கினார். பின்னர், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் மேயர் பிரியா பேசியதாவது: சென்னைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

அதன்படி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை பள்ளிகள் திகழ வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு அடையாள அட்டைகள், காலணிகள், சீருடைகள் வழங்குதல் உள்ளிட்ட 27 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிட்டீஸ் திட்டம் மூலமாக பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சென்னை பள்ளி மாணவர்கள் விளையாட்டு, கல்வி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றில் ஒவ்வொருவரும் தனித்துவமாக விளங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை பள்ளிகளுக்கு வயலின், கிட்டார், கீபோர்டு உள்ளிட்ட இசைக்கருவிகள் வழங்கப்பட்டு, அதற்கான பயிற்சி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்பந்து, கேரம், செஸ் ஆகிய விளையாட்டுகளில் சாதிக்க விரும்பும் மாணவர்களும் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். மாணவியருக்கு தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்படுகிறது. இந்த தற்காப்புக் கலையில் அடுத்த மாதம் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.

SCROLL FOR NEXT