பிரதிநிதித்துவப் படம் 
கல்வி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவ.25-ல் திறன் மதிப்பீட்டுத் தேர்வு தொடக்கம்

சி.பிரதாப்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நவம்பர் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; "தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 3 மற்றும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதல் இரு கட்ட தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெறவிருந்த 3-ம்கட்ட தேர்வுக்கால அட்டவணையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த தேர்வானது நவம்பர் 25 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கிடையே டிசம்பர் 4ம் தேதி மத்திய அரசின் தேசிய சாதனை ஆய்வு (National Achievement Survey-NAS) தேர்வு நடைபெற இருப்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தேர்வை வகுப்பு ஆசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத் தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்த தாளிலேயே குறிப்பிட செய்ய வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத் தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT