தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழாவில், 9 பதக்கங்களை பெற்ற சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் வி.ராம் ஆனந்துக்கு பதக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். உடன் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.நாராயணசாமி, சண்டிகர் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் விவேக் லால் உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு 
கல்வி

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. 37-வது பட்டமளிப்பு விழாவில் 57 பேருக்கு தங்கப்பதக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இதில் 57 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கப்பதக்கங்களை வழங்கினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கி.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார். சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விவேக் லால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விழாவில் டாக்டர் விவேக் லால் பேசும்போது, ‘‘உலகளவில் இந்திய மருத்துவர்கள்தான் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும்தான் மருத்துவர்களை தங்களது குடும்ப உறுப்பினர்கள்போல மக்கள் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவர்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். உங்ளுடைய பணி மிகவும் பொறுப்பான பணியாகும். எனவே நோயாளிக்காக, நோயாளி மூலம், நோயாளியுடன் என்பதை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள மருத்துவ கல்வியே சிறந்த மருத்துவக் கல்வியாக இருக்கிறது. அதற்கு அரசும் உதவிக்கரம் நீட்டுகிறது’’ என்றார்.

பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் துறையில் 5,371 பேரும், பல் மருத்துவத்தில் 1,485 பேரும், ஆயுஷ் மருத்துவத்தில் 2,055 பேரும், மருத்துவம் சார்ந்த துணைபடிப்புகள், செவிலியர், தொழில்சிகிச்சை, மருந்தியல், பிசியோதெரபி ஆகியவற்றில் 26,882 பேரும் என மொத்தம் 35,793 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 121 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். மேலும் 57 தங்கம், 18 வெள்ளி பதக்கங்கள், 27 அறக்கட்டளை சான்றிதழ்கள், 40 பேருக்கு பல்கலைக்கழக பதக்கம் என 142 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் டாக்டர் வி.ஸ்ரீராம் ஆனந்த் 9 பதக்கங்களையும், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் டாக்டர் எம்.சுக்ரித் நந்தா 7 பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்திருந்தனர். விழாவில், ஆளுநரின் செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஆறுமுகம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் செந்தாமரை உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் புறக்கணிப்பு: இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘திராவிடம்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் இதற்கு மன்னிப்பு கேட்கப்பட்டது. ஆனாலும், இதுதொடர்பான விவாதம் தொடருகிறது. இந்நிலையில், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளை திமுக அமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அந்தவகையில், இந்த பட்டமளிப்பு விழாவிலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT