பிரதிநிதித்துவப்படம் 
கல்வி

கனமழையால் மைய அளவிலான குறுவள கலைத் திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித் துறை

சி.பிரதாப்

சென்னை: தொடர் கனமழை காரணமாக, அரசுப் பள்ளிகளில் நடைபெறவிருந்த குறுவள அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டிலும் 1-ம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு உட்பட பல்வேறு போட்டிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி அளவிலான போட்டிகள் முடிவுற்றதை அடுத்து தொடர்ந்து குறுவள மையப் போட்டிகள் அக்டோபர் 14ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (திங்கள்கிழமை) முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை பாதிப்புள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதேபோல், நாளை மறுதினம் ( அக்.17) முதல் தொடங்கவிருந்த வட்டார அளவிலான போட்டிகளும் தள்ளிப் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT