கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1920 பேருக்கு பட்ட சான்றிதழ்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா இன்று (அக்.14) நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தருமான கோவி.செழியன் முன்னிலை வகித்தார்.
ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குநர் பேராசிரியர் பி.எஸ்.மூர்த்தி பட்டமளிப்பு விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: "விக்சித் பாரத்" என்ற வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. இதில் பல்வேறு துறைகளின் பங்களிப்புகளை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது.
ஹைதராபாத் ஐ.ஐ.டி.-யின் முக்கிய குறிக்கோளாக "மனிதகுலத்திற்கான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல் மற்றும் புதுமைப்படுத்துதல்" உள்ளது. சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணுதல், அனைத்து தரப்பினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்துகிறோம். காலநிலை மாற்றம், பல்வேறு வளங்களின் சுரண்டல், சமூகத்தில் சமத்துவமின்மை, சுகாதார குறைாடு போன்ற தடை ஏற்படுத்தும் சவால்களுக்கு தீர்வு காண முயற்சி காண வேண்டும்.
இப்போது உலகத்திற்கு சிக்கல்களுக்கு தீர்வு காணும் புதுமையான சிந்தனையாளர்கள் தேவை என்பதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், சமூகத்தை மேம்படுத்திடவும் செயல்பட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில் 1,622 முனைவர் பட்ட ஆய்வாளர்களும், முதுகலை மற்றும் இளநிலை பட்டங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 298 மாணவர்களும் பட்ட சான்றிதழ்கள், தங்கப் பதக்கங்களை ஆளுநரிடம் இருந்து பெற்றனர்.
மேலும் 1,17,233 இளநிலை பட்டப்படிப்பு, 42,312 முதுகலை பட்டப்படிப்பு, 279 இளமுனைவர், 1,172 முதுகலை பட்டயப்படிப்பு என மொத்தம் 1,62,618 மாணவ, மாணவிகள் தபால் மூலமாக தங்களது பட்டங்களை பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலரும், துணைவேந்தர் பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான கே.கோபால், பதிவாளர் ரூபா குணசீலன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆளுநரிடம் மனு அளித்த முனைவர்: கோவை பாரதியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவின்போது முனைவர் பட்டம் பெற்ற ஆய்வு மாணவர் பிரகாஷ், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்களில் சிலர், பி.எச்டி. ஆய்வு படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களை அவர்களின் வீட்டு பணிகளை செய்ய நிர்பந்தம் செய்கின்றனர்.
மேலும் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும்போது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவிடுமாறு ஆய்வு மாணவர்களிடம் வழிகாட்டி பேராசிரியர்கள் கேட்கின்றனர். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பிறகு சில ஆய்வு மாணவர்கள், தங்களின் வழிகாட்டி பேராசியர்களுக்கு பணம், தங்கம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.75 லட்சம் வரை விடுதி பராமரிப்புக்குநிதி ஒதுக்குகிறது. ஆனால் விடுதி பராமரிப்பு கட்டணம் மாணவர்களிடம் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பொது விடுதியாக நடத்தப்படுவதால், அங்கு தங்கியுள்ள மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் ஆகியோர் விடுதி கட்டணத்தை செலுத்த மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கும் விடுதியில் அமைச்சர் ஆய்வு: இதைத்தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி பட்ட படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியில் ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை உட்கொண்டு தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கோபால், பதிவாளர் ரூபா குணசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.