காட்டாங்கொளத்தூர்: அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வெற்றிப்பாதை’ என்ற நிகழ்வு நேற்று காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: வெற்றிப்பாதை நிகழ்ச்சியை இந்த தருணத்தில் சரியாக திட்டமிட்டுள்ளனர். கல்லூரி படிப்புக்குப் பிறகு அடுத்தது என்ன என்ற நிலைக்கு செல்வதற்கு இது முக்கியமான வழிகாட்டுதலாகும். கல்லூரி முடித்த பிறகு என்ன செய்யப் போகிறோம் என்பதை திட்டமிடுவதற்கு சரியான தருணம் இது. நாம் செல்லும் பாதையை தேர்வு செய்யவும் சரியான நேரமிது.
சரியானதை தேர்ந்தெடுங்கள்: கல்லூரி முடித்த பிறகு உயர் கல்வியா? அரசு தேர்வு எழுதப் போகிறோமா? அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை தேடப் போகிறோமா? என்பதை தேர்வு செய்ய வேண்டிய மிக முக்கியமான காலகட்டமிது. நான் கல்லூரி படிக்கும் போதே, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை சரியாக முடிவு செய்தேன். அதன்படி சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தயார்படுத்திக் கொண்டேன்.
நமக்கு என்னென்ன வாய்ப்புகள் எங்கெங்கே உள்ளன, எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதுகுறித்து போதிய விழிப்புணர்வுகள் இன்றைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பல வாய்ப்புகள் இருந்தாலும் நமக்கு எது சரியாக பொருந்தும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
திட்டமிடுதல் அடுத்த நிலைக்கு உயர்த்தும்: நீங்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்குசரியாக முடிவு எடுக்க வேண்டும். அதற்குஇந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதைச் செய்தாலும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். படிப்பிலும் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். திட்டமிடுதலே நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.
நம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும். நம்மால் முடியாது என்ற தடை கற்களை உடைத்து அகற்ற வேண்டும். ஐஏஎஸ் படிப்பது மிகவும் கடினம் என பலர் முயற்சி செய்யாமல் இருக்கின்றனர். அது தவறு. எந்த பணியாக இருந்தாலும்அதை முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் கடினமான உழைத்தால் வெளிச்சமான எதிர்காலம் நமக்கு நிச்சயம் உண்டு.
நான் ஐஏஎஸ் தேர்வை திட்டமிட்டு படித்தேன் இந்திய அளவில் 32-வது இடமும் தமிழக அளவில் மூன்றாம் இடமும்பிடித்தேன். கல்லூரியில் படிக்கும்போது அங்கு நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்று, அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பேன். உங்களைப் பற்றி நீங்களே தவறான புரிதலை ஒருபோதும் கொண்டிருக்கக் கூடாது, இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
தொடர்ந்து, தான் ஐஏஎஸ் தேர்வில்எவ்வாறு வெற்றி பெற்றேன் என்னென்னகேள்விகள் நேர்முகத் தேர்வில் கேட்கப் பட்டன? என்பது போன்ற விவரங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்: நிகழ்ச்சியில், ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் பேராசிரியர் டி.ஸ்டாலின் பேசியதாவது: சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் என்ற எண்ணம், உணர்வு நமக்குள் முதலில் வர வேண்டும். பலர் பின்தங்கிய குடும்ப பின்னணியிலிருந்தும் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தோல்விக்கு குடும்ப பின்னணியைக் காரணம் காட்டக்கூடாது.
wநமது நாட்டின் ஜனாதிபதியான அப்துல் கலாம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். பெரிய அறிவியல்விஞ்ஞானியாகவும் நாட்டின் முதல் குடிமகனாகவும் வந்தார். அவர் குடும்பப்பின்னணியை நாம் சிந்திக்க வேண்டும். கிரிக்கெட் வீரர் தோனி, தொழிலதிபர் அம்பானி உள்ளிட்ட பலர் சிரமமான பின்னணியிலிருந்து உலகின் முன்னணி நிலைக்கு வந்துள்ளனர்.
முயற்சிதான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். பிரச்சினைகளைக் கண்டுபயப்படக்கூடாது. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். எந்த காரியத்தை நீங்கள் செய்தாலும் உண்மையாக, உறுதியாக செய்ய வேண்டும்.
நம்மால் இந்த சிவில் சர்வீஸ் தேர்வைஎழுத முடியுமா? என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கக் கூடாது. நீங்கள் ஆளப்பிறந்தவர்கள். நீங்கள் நினைத்தால் சாதிக்கலாம். இந்த உலகத்தில் சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறைய வழிகள் திறந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், எஸ்ஆர்எம் கல்வி நிறுவன பதிவாளர் டாக்டர் எஸ்.பொன்னுச்சாமி, துணை பதிவாளர் டாக்டர் அசோக் ஆண்டனி, எஸ்ஆர்எம் காலேஜ் ஆஃப் ஹியுமானிட்டீஸ் முதல்வர் டாக்டர் ஏ.துரைசாமி, துணை முதல்வர் டாக்டர்எஸ்.ஆல்பர்ட் அந்தோணிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, எஸ்ஆர்எம் ஸ்டூடண்ட்ஸ் அஃபயர்ஸ் இயக்குநர் டாக்டர் நிஷாஅசோகன் அனைவரையும் வரவேற்றார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்வை ஒருங்கிணைத்து வழங்கினார். நிறைவாக, மாணவ - மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர்.