சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான ஆர்.என்.ரவிதலைமை தாங்கினார். பிஎச்டி முடித்த 18 உட்பட 4,669 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்து விளங்கிய 58 பேருக்கு தங்கப் பதக்கங்கள், பரிசுகள் அளிக்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பேசியதாவது: பட்டம் பெறும் மாணவர்களின் கல்வி, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து கற்றல் என்பது சட்டத் துறையில் மிகவும் அவசியம்.
சட்ட மேதை அம்பேத்கர் தனதுவாழ்க்கையை சமூகநீதி, சமத்துவத்துக்காக அர்ப்பணித்தார். குறிப்பாக, சட்ட உதவியை நாட இயலாதவர்களுக்கு நீதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தார். சட்டம் படித்த வழக்கறிஞர்கள் அதை பின்பற்றி, மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் தொழில்முறை பயணத்தில் தனிநபர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். சட்டம் சார்ந்தபயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி சமூக பிரச்சினைகள், மனித உரிமை மீறல்களை காத்தல், பாலின வேறுபாடுகளை களைதல் என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.சட்டத்தின் செயல் திறனும், ஒழுக்கமும் அதை செயல்படுத்துபவரின் நேர்மை, நோக்கத்தை சார்ந்தது.
சரியானவர்கள் சட்டத்தை புரிந்துகொண்டு பயன்படுத்தும்போது, அது கருணை, நீதிக்கான கருவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் துணைவேந்தர் நா.சு.சந்தோஷ்குமார், பதிவாளர் கவுரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்கவில்லை.