கல்வி

மத்திய அரசின் தேசிய அறிவுசார் சொத்து விருதுக்கான ஆராய்ச்சிகளை சமர்பிக்க யுஜிசி அறிவுறுத்தல் 

சி.பிரதாப்

சென்னை: தேசிய அறிவுசார் சொத்து விருதுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் சமர்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இன்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'நம்நாட்டில் ஒவ்வொரு நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சிறப்பு அங்கீகாரத்தை வழங்க ஏதுவாக அறிவுசார் சொத்து விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் மத்திய அரசின் கீழ் இயங்கும் பொது காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு அமைப்பு (சிஜிபிடிடிஎம்) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த விருதுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஊழியர்கள் அறிவுசார் சொத்து விருது பெறுவதற்கான தங்கள் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் குறித்த முழு விவரங்களை சமர்ப்பிக்கலாம். அதில் தகுதியானவை தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

அதன்படி, தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற உள்ளது. தகுதியானவர்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் விருதுகளை வழங்க இருக்கிறார். இதன்மூலம் கல்வி மற்றும் தொழில்துறை வட்டாரங்களின் நிலையும் மேம்படும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை யுஜிசியின் வலைத்தளத்தில் (https://www.ugc.gov.in) சென்று அறிந்து கொள்ளலாம்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT