‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருதுக்காக இணைய வழியில் ஆசிரியர்களிடம் நேர்காணலை நடத்திய நடுவர் குழுவினர்.படங்கள்: எஸ்.சத்தியசீலன் 
கல்வி

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர் - 2023’ விருதுக்கான தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர்-2023’ விருதுக்காக கடந்த 2 நாட்களாக இணையவழியில் நடத்தப்பட்ட நேர்காணலில் ஆசிரியர்கள் பலர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு தனித்துவமிக்க கல்வியை அளிப்பதுடன், மாறுபட்ட சிந்தனை உடன் செயல்பட்டு பள்ளிக்கு பெருமை சேர்க்கும் அர்ப்பணிப்புமிக்க அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘அன்பாசிரியர்’ விருது 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4-வது முறையாக ‘அன்பாசிரியர் - 2023’ விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து 'இந்து தமிழ் திசை' நாளிதழ் வழங்க உள்ளது.

இந்நிகழ்வை லட்சுமி செராமிக்ஸ், வர்த்தமானன் பதிப்பகம், பொன்வண்டு டிடர்ஜெண்ட், சுராஸ் ஸ்கூல் கைடு ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து முன்னெடுத்து நடத்துகின்றன.

இந்த அன்பாசிரியர் விருதுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அதிலிருந்து நேர்காணல் தேர்வுக்கு மொத்தம் 148 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான நேர்காணல் இணையவழியில் கடந்த 2 நாட்களாக (ஜூலை 20, 21) நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணலில் மாற்று ஊடக மைய இயக்குநர் பேராசிரியர் இரா.காளீஸ்வரன், து.கோ.வைணவக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ப.முருகன், எழுத்தாளர் ஆதிரா முல்லை, ஆஹா குரு இயக்குநர் பாலாஜி சம்பத், லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியர் உமா ஷக்தி, சுடர் கல்வி இயக்கத்தின் இயக்குநர் ஏ.ரவிசங்கர், சர் தியாகராயர் கல்லூரி உதவிப் பேராசிரியர் எம்.சுஜாதா, பாட்ரிஷியன் கல்லூரி பேராசிரியர் எ.ராஜசேகர் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

நேர்காணலில் கற்றலில் புதிய உத்திகளை பயன்படுத்துதல், புத்தக வாசிப்பு, மாணவர்கள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆசிரியர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதனுடன் ஆசிரியர்களின் தனித்திறன் சார்ந்த செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து நடுவர்கள் கூறியதாவது: இந்து தமிழ் திசை முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. ஆசிரியர்களே சமூக முன்னேற்றதுக்கான அடித்தளமாக இருக்கின்றனர். அதேபோல் பள்ளிகளில்தான் எதிர்கால தலைமுறை உருவாக்கப்படுகிறது. அங்கு மாணவர்களை முறையாக நல்வழிபடுத்தி கல்வியை வழங்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

அதன்படி பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தலையும் தாண்டி திறம்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் 'இந்து தமிழ் திசை'யின் செயல் போற்றுதலுக்குரியது. தனித்திறன், சமூகநல செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு கூறினர்.

நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் சுந்தர் (தேனி), ரேணுகா (திருநெல்வேலி), மேனகா (காஞ்சிபுரம்) ஆகியோர் கூறும்போது, ‘‘தகுதி மற்றும் சேவையின் அடிப்படையில் இந்த அன்பாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான நேர்காணலில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தலை தாண்டி சமூகத்துக்கு செய்துள்ள பங்களிப்பையும் விருதுக்கான அளவுகோலாக கொண்டுள்ளது சிறப்புக்குரியதாகும். இந்த அனுபவம் எங்களின் பணிகளை முன்நகர்த்தி செல்ல உந்துதலாக அமைந்துள்ளது. மேலும், இந்த விருது மற்ற ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும். இந்த வாய்ப்பை நல்கிய 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு மனம் நிறைந்த நன்றிகள்’’ என்றனர்.

இதற்கிடையே நேர்காணல் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இதில் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 40 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படும்.

SCROLL FOR NEXT