மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேரவை கூட்டம் நடைபெற்றது 
கல்வி

உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவு தேர்வு கூடாது: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேரவை கூட்டத்தில் தீர்மானம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தமிழகத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தக் கூடாது என்றும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 45-வது பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 45- வது பேரவை கூட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் தலைமையில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. கூட்டத்தை துணைவேந்தர் தொடங்கி வைத்தபின், பேரவை உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துணைவேந்தரும், சிண்டிகேட் உறுப்பினர்களும் பதில் அளித்து பேசினர். கேள்வி நேரத்துக்குப் பின் உறுப்பினர்களால் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் சுயநிதி பிரிவு ஆசிரியர்களுக்கு தகுந்த ஊதியம், பணிப் பாதுகாப்பு, குறிப்பிட்ட வேலைநேரம், சட்டப் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது போல் தமிழக அரசும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பேரவை உறுப்பினர் ராஜு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் உள்ள சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும், அரசு கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ரூ. 50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று 2023-ல் பிறப்பித்துள்ள அரசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு பணியாற்றிடும் பேராசிரியர்களுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம்கூட வழங்கப்படுவதில்லை.சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றிடும் பேராசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்புகளுக்குமாக கேரளா அரசாங்கம் சுயநிதிக் கல்லூரிகளுக்கு என தனி சட்டம் இயற்றியுள்ளது.

ஆனால், தமிழகத்தில் சுயநிதி கல்லூரிகளை கண்காணித்திட தனிச்சட்டம் எதுவும் இல்லை. தமிழ்நாடு அரசும் கேரளாவை பின்பற்றி தனியார் சுயநிதி கல்லூரிகளை கண்காணித்திட தனி சட்டம் இயற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுபோல் தமிழகத்தின் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு எவ்விதமான நுழைவு தேர்வும் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி பேரவை உறுப்பினர் நீலகிருஷ்ணபாபு கொண்டுவந்த தீர்மானமும், தமிழகத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை நிறுத்தி வைத்து, புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதி வழங்கக் கூடாது என்று உறுப்பினர் விஜயசேவியர் கொண்டுவந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவதிலும் ஏற்படும் காலதாமதம் காரணமாக பணியில் சேர்வதற்கும் உயர்கல்வியில் சேர்வதற்கும் மாணவர்களுக்கு தடங்கள் ஏற்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவற்றை சரி செய்ய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்தார். 2016-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக குழு அமைத்து விசாரித்து அது தொடர்பான அறிக்கை சிண்டிகேட்டில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 2022, 2023-ம் ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குக்கான மொத்த செலவு ரூ.28.15 லட்சம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேரவை உறுப்பினர் கே. சங்கரராமன் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் 2022-ம் ஆண்டு 2 வழக்குகளும், 2023-ல் 6 வழக்குகளுமாக மொத்தம் 8 வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 2022-ம் ஆண்டில் 10 வழக்குகளும், 2023-ம் ஆண்டு 53 வழக்குகளுமாக மொத்தம் 63 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகளுக்காக 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.28,15, 950 செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT