இந்தூர்: பார்வை குறைபாடு உடைய மாணவி ஷிவானி (21) இந்தூர் ஐஐஎம் கல்லூரியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஜகீராபாத் நகரத்தைச் சேர்ந்தவர் மாணவிகோட்டக்காப்பு ஷிவானி. பிறவியிலேயே பார்வை அற்றவராக இருந்தபோதிலும் கடின உழைப்பைச் செலுத்திப் படித்தார். உயர்கல்வி பெற்று உயரப் பறக்கும் கனவுடன் சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். மேற்கொண்டு முதுநிலை பட்டம் பெறும் விருப்பத்தில் எம்பிஏ படிப்புக்கான பொது சேர்க்கைத் தேர்வினை (சிஏடி) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதினார். நாடு முழுவதும் உள்ள 18 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். இறுதியில் இந்தூர் ஐஐஎம் கல்லூரியில் வெற்றிகரமாகச் சேர்க்கை பெற்றுள்ளார்.
தனது சாதனை குறித்து மாணவிஷிவானி கூறியதாவது: எனது சிக்கல் அறிந்து எனது பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ள பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில்சேர்த்துவிட்டார்கள். தன்னம்பிக்கை இழக்காமல் முயன்று படித்து தற்போதைய உயரத்தை அடைந்திருக்கிறேன். ஐஐஎம்-ல் முதுநிலை பட்டம் பெற்றதும் கார்ப்பரேட் உலகில் பணிபுரிய விரும்புகிறேன். பணியில் சேர்ந்ததும் அதுதொடர்பான அனைத்து துறைகளிலும் அனுபவம் பெற வேண்டும். பிறகுதான் சிறப்புப்பிரிவைத் தேர்வுசெய்து மேலாண்மையில் உயரிய பதவியை அடைய வேண்டும்.
இவ்வாறு ஷிவானி கூறினார்.
இது தொடர்பாக ஐஐஎம் முதுநிலைப் பட்டப்பிரிவின் தலைவர் பேராசிரியர் சயந்தன் பானர்ஜி கூறியதாவது: ஐஐஎம் முதுநிலை பட்டப்பிரிவில் சேர்க்கை பெற்றுள்ள 482 மாணவர்களில் ஷிவானியும் ஒருவர். பன்மைத்துவத்தை ஆதரிக்கும் போக்கை இந்த நிறுவனம் ஆரம்பம்முதலே கடைப்பிடித்து வருகிறது. ஷிவானி போன்றதொரு புத்திசாலி மாணவி கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் கல்லூரி வகுப்பறையில் பார்வை குறைபாடுஉடைய மாணவர்களின் வசதிக்காக விரிவுரைகளை ஒலிப்பதிவுசெய்யும் சாதனம் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.