கல்வி

பிளஸ் 2-வுக்குப் பிறகு: மாணவரின் விருப்பமும் பெற்றோரின் எதிர்பார்ப்பும்...

எஸ்.எஸ்.லெனின்

ற்போது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு அடுத்து எந்தத் துறையில் உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பதே அவர்கள்முன்னிருக்கும் மிகப் பெரிய சவால்.

உயர்கல்வி வாய்ப்புகளில் உரியதைத் தேர்வு செய்வதைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், எந்தத் துறையில் தனக்கு ஆர்வம் இருக்கிறது, பெற்ற மதிப்பெண்ணுக்கு எந்தப் படிப்பில் இடம் கிடைக்கும்... இப்படி பல.

முதலில் மாணவர்கள் தங்களுடைய விருப்பம், ஈடுபாடு குறித்துத் தெளிவு பெற வேண்டும். தனக்கு விருப்பமான பாடங்கள் அடங்கிய உயர்கல்வித் துறை, விரும்பும் பணி சார்ந்த படிப்புகள், எதிர்கால லட்சியம் ஆகியவற்றில் தன்னளவில் தெளிவு பெற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள், படித்துப் பணியில் இருக்கும் பெரியவர்கள் உறவினர்களின் வழிகாட்டலை நாடலாம்.

தாங்கள் பரிந்துரைக்கும் துறையில் தங்களுடைய குழந்தைக்கு மேற்படிப்பு படிக்க விருப்பம் இருக்கிறதா எனப் பெற்றோர் புரிந்துகொள்வது அவசியம். முற்றிலுமாகத் தங்களுடைய ஆலோசனையைக் குழந்தைகள் ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள பெற்றோர் இறங்கி வருவதில் தவறில்லை. போதிய காரணம் இன்றி குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பதாகத் தெரிந்தால், ஆசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள், வழிகாட்டிகளின் உதவியை நாடலாம். துறை சார்ந்த வல்லுநர் உரிய காரணங்களுடன் விளக்கும்போது மாணவர் உடன்படவும், மாணவர் தரப்பு விருப்பங்களையும் நியாயங்களையும் பெற்றோர் அறியவும் வாய்ப்பு கிடைக்கும்.

சில வீடுகளில் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பு, மாணவரின் விருப்பம் இரண்டுமே சாத்தியமாகும் விந்தை நிகழ்வதைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு மாணவருக்கு இசைக்கலைஞர் ஆக வேண்டுமென்பது லட்சியம் இருக்கும். அவரின் கணிதத் திறமையை அடிப்படையாக வைத்து, பொறியியல் துறையில் சேர்ப்பதற்குப் பெற்றோர் ஆவலாக இருப்பார்கள். இருதரப்பிலும் பேசி ஒருமனதாகச் சமரச முடிவு ஒன்றை எட்டுவார்கள். அதன்படி பொறியியல் படித்தவாறே, பகுதி நேரமாக இசை வகுப்புகளுக்கு மாணவர் சென்று வருவார்.

பெற்றோரின் சம்மதத்துடன் வெற்றிகரமாகப் படிப்பை முடிப்பவர், அப்போதைய முதிர்ச்சியான மனநிலையில் தனது பாதையைப் பொறியியல் அல்லது இசையின் திசையில் சுயமாகத் தீர்மானிப்பார். அல்லது பொருளாதாரத் தேவைக்காக ஒரு முழு நேரப் பணியை மேற்கொண்டவாறே தனக்குப் பிடித்த இசையில் அடுத்த கட்டத்துக்குச் செல்வார். அல்லது தனக்கான எதிர்காலத்தை இசை அமைத்துக்கொடுக்கும் என அப்போதும் அவர் நம்பினால் பெற்றோர் குறுக்கே நிற்க மாட்டார்கள். இருதரப்பினரின் வெற்றியும் இந்தச் சமரச முடிவில் சாத்தியமாகும்.

சில குடும்பங்களில் பொருளாதாரம், இன்ன பிற குடும்பச் சூழலால் மாணவர்களின் விருப்பத்துக்குத் தடையாக எழும். உரிய மதிப்பெண் தகுதி இருப்பின் மாணவர் சார்பில் கல்விக் கடன் பெறலாம்.

சில குடும்பங்களில் மாணவரின் விருப்பத்துக்கு ஏற்ப உயர்கல்விக்குக் கூடுதல் வருடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். முனைவர் ஆராய்ச்சிப் படிப்புவரை படிக்க வேண்டுமென்பது மாணவரின் கனவாக இருக்கலாம் ஆனால், குடும்பச் சூழல் வேலைக்குச் செல்வதற்கான அழுத்தத்தை அவருக்குக் கொடுக்கும். இம்மாதிரி சூழலில் அவர்கள் குறிப்பிட்ட படிப்பை முடித்ததும், ஏதேனும் பணியில் ஈடுபட்டபடியே தங்களது உயர்கல்வி கனவுக்கு முயலலாம்.

அதுபோன்றே விரும்பிய பட்டப் படிப்பை அப்போதைக்குப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள், அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் படிப்பை முடித்து ஒரு பணியிலிருந்தபடியே விரும்பிய உயர்கல்வியைத் தொடர முயலலாம். உதாரணத்துக்குப் பொறியியல் படிப்பு முடிக்கும் சூழல் வாய்க்காதவர், அதே துறையில் டிப்ளமோ படிப்பை முடித்துக் கிடைக்கும் பணியை மேற்கொண்டபடியே, பகுதி நேரமாகப் பட்டப் படிப்புக்குத் தன்னை உயர்த்திக்கொள்ளலாம்.

“இந்தப் படிப்புக்கு மார்க்கெட் இருக்கிறது, இதைப் படித்தால் கூடுதல் ஊதியத்துடன் பணி கிடைக்கும்” என்பது போன்ற கணக்குகளின் அடிப்படையில் சில குடும்பங்களில் மாணவரின் உயர்கல்வித் தேர்வைப் பரிசீலிப்பார்கள். அந்த நேரத்தில் அதிக எதிர்பார்ப்புள்ள படிப்பு சில வருடங்களில் மதிப்பிழக்கவும் வாய்ப்புண்டு.

அதிக ஊதியத்தை நம்பிச் சேரும் படிப்புகள் மாணவருக்குப் பிடிக்காமல் போனாலோ பணிச் சூழல் அவரது உடல்நிலைக்கு ஒவ்வாததாக அமைந்தாலோ வாழ்க்கையில் படிப்பும் பணியுமே பெரும் தண்டனையாக மாறிப்போகும். சில மாணவர்கள் தங்களின் பால்ய வயதுக் கனவு, சக மாணவர்கள், நண்பர்களின் அழுத்தம் காரணமாக மற்றவர்கள் சேரும் படிப்புகளில் தானும் சேர்ந்து படிக்க விரும்புவார்கள். தன்னுடைய தனிப்பட்ட ஆர்வம், திறமை குறித்த அறியாமையில் அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்குப் பொறுமையாகக் குடும்பத்தினர் விளக்கிப் புரியவைக்க வேண்டும்.

இவ்வாறு தெளிவு பெற்ற பின்னர், கொட்டிக்கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகளைத் துறைவாரியாக அலசித் தனக்கானதை அடையாளம் காணத் தொடங்கலாம்.

SCROLL FOR NEXT