சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தில் ஆர்வமுடன் புத்தகங்களை வாசிக்கும் மாணவ, மாணவிகள் | படங்கள்: எஸ்.குரு பிரசாத்  
கல்வி

சேலம் அருகே  ஊராட்சி ஒன்றிய பள்ளியில் டிஜிட்டல் நூலகம் திறப்பு - தமிழகத்தில் முதல் முறை!

வி.சீனிவாசன்

சேலம்: தமிழகத்தில் முதல் முறையாக சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளிடம் தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திடவும் டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது பெற்றோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர்கள் இப்பள்ளியில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதாவின் சீரிய முன்னெடுப்பு பணிகளால், குழந்தைகளின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்பட்டு, 16 ஆசிரியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியில் கடந்த 25-ம் தேதி, குழந்தைகளிடம் தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும் தமிழகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆர்வத்துடன் டிஜிட்டல் நூகலத்தில் உள்ள படக்காட்சி புத்தகங்கள், தெனாலி ராமன் கதை புத்தகங்கள், அறிவியல், நல்ல பழக்க வழக்கங்கள் பட காட்சி புத்தகங்களை ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.

டிஜிட்டல் நூலகத்தை செயலாற்றும் பணியில் பள்ளி நிர்வாகம் பெற்றோரையும் இணைத்து, நூலக காப்பாளர்கள் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மற்றுமொரு சிறப்பு. இதற்கு பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை அமுதா கூறியது: “தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் டிஜிட்டல் நூலகம் எங்கள் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் நூலகத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் 5,300 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் 3,500 தமிழ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 420 மாணவ, மாணவியர் டிஜிட்டல் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளுக்கு நூலகத்தை கொண்டு சென்று படிக்க வசதியாக, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நூலக அட்டை வழங்கி, அதில் பெற்றோரின் கையொப்பம் பெற்று, வாசித்த பின்னர், நூலகத்துக்கு கொண்டு சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.நவீன தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக வீட்டு வீட்டுக்கு மரம் வளர்க்கப்படுகிறதோ இல்லையோ, செல்போன் போன் இன்றியமையாத இடத்தை பிடித்து மனிதர்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

இதில் குழந்தைகள் விதிவிலக்கல்ல என்ற சூழல் உருவாகியுள்ள காலத்தின் கொடூர முகத்தை டிஜிட்டல் நூலகம் வாயிலாக வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி, தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் சிறிய முயற்சியை கையில் எடுத்துள்ளோம். டிஜிட்டல் நூலகத்தில் அமையப்பெற்றுள்ள பிரமாண்ட தொடு திரையில், குழந்தைகள் தங்களுக்கு பிடித்த நூலை தேர்வு செய்து, அவர்களுக்கான குட்டி உலகத்துக்குள் வண்ண மயமான பல கதைகளை கேட்டு, படித்து, மகிழ்ந்து வருகின்றனர்.

இதனால், செல்போன் என்ற அரக்கனின் பிடியில் இருந்து குழந்தைகள் விடுபட்டு, வாசிப்பு உலகத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளது மாற்றத்துக்கான சிறு முயற்சியாக கருதுகிறோம். இதேபோல, அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்திட தமிழக அரசு டிஜிட்டல் நூலகங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்பாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT