சென்னை ஐஐடி | கோப்புப் படம் 
கல்வி

கணிதம் மூலம் இலவச ஆன்லைன் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம் | சென்னை ஐஐடி ப்ரவர்த்தக்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி ப்ரவர்த்தக், கணிதம் மூலம் இலவச ஆன்லைன் படிப்புக்கான விண்ணப்பப் பதிவுகளைத் தொடங்கியுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடி ப்வர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம், பள்ளி - கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் வல்லுநர்கள் ஆகியோரிடையே ஆக்கபூர்வமான சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கணிதத்தின் மூலம் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பாடநெறி அனைவருக்கும் இலவசமாக ஆன்லைனில் கிடைக்கப்பெறும். ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ நான்கு நிலைகளைக் கொண்ட 10 வாரகால பாடத்திட்டமாகும். குறிப்பிட்ட கால அளவில் அசைன்மெண்ட் மற்றும் தீர்வுகள் போன்றவையும் இடம்பெறும். 10 லட்சம் பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள் தவிர பணிபுரியும் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரையும் சென்றடைய ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்த்தக் திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் 9 ஆகஸ்ட் 2024. அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் வகுப்பு (நான்கு நிலைகளுக்கும்) 10 ஆகஸ்ட் 2024 அன்று தொடங்கும். விருப்பமுள்ள மாணவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவு செய்யலாம்: https://iitmpravartak.org.in/out-of-box-thinking பாடத்திட்டம் மற்றும் பல்வேறு நிலைகளுக்கான தகுதி பற்றிய கூடுதல் விவரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்: https://iitmpravartak.org.in/out-of-box-thinking.

இத்தகைய படிப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கி ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “உலகின் அன்றாடப் பிரச்சனைகளை புதுமையான முறையில் அணுகி தீர்வு காண்பதில் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ சிந்தனை மிகவும் அவசியமானதாகும்.

கணிதத்தில் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் சிந்தனையைப் பயன்படுத்துவதால் படைப்பாற்றல் வளரச் செய்கிறது. அத்துடன் நிலையான சூத்திரங்கள், வழிமுறைகள் ஆகியவற்றுக்கு அப்பால் சிந்திக்க ஊக்குவித்து, புதிய அணுகுமுறைகள், தனித்துவமான தீர்வுகளுக்கு வழிவகுக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT