கல்வி

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றுவதை கண்டித்து ஆட்சியரிடம் மனு @ கோவை

இல.ராஜகோபால்

கோவை: சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்கட்சியினர் இன்று (ஜூன் 18) மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஈஸ்வரன் கூறும் போது, “தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக குறைந்த மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவிகளை சில பள்ளி நிர்வாகத்தினர் கட்டாயமாக வெளிறே்றும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடத்தில் நேரடியாகவும் தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கு தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் அக்கட்சியினர் அளித்த மனுவில், அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு நிறைவு பெற்றபின் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி சதவீதம் குறையும் என கருதி குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை கட்டாயப்படுத்தி மாற்று சான்றிதழ் தந்து வெளியேற்றும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்று வெளியேற்றிய மாணவர்களை உடனடியாக மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிப்பை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும்.

கோவையில் சில காரணங்களை கூறி இரு குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வழக்கு தொடுத்ததன் காரணமாக அந்த குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்குமாறு கோவை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் உயர் நீதிமன்றம் செல்ல முடியாது என்பதால் அந்த இருவரும் பெற்ற தீர்ப்பை அனைத்து குழந்தைகளுக்கும் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT