கல்வி

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானதால், பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. முதல் நாளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க பல்வேறு பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலவச பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு முதல் நாளிலேயே வழங்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, வரும் 2024-25 கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வி துறை கடந்த 8-ம் தேதி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு செப்டம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை. அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை. அதேபோல, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும்.

220 வேலை நாட்கள்: பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 27-ம் தேதியுடன் நிறைவு பெறும். ஏப்ரல் 28 முதல் கோடை விடுமுறை விடப்படும். மொத்த பள்ளி வேலை நாட்கள் 220 ஆக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT