கல்வி

நீட் தேர்வு முடிவு குளறுபடியில் 1,600 மாணவர்கள் ‘பாதிப்பு’ - உயர்மட்ட குழு விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய உயர் கல்வித் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில், 24 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை என்றும், புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும அவர் தெரிவித்தார்.

வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை நீட் தேர்வில் பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் இருந்து இதற்கு வலுவான குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில், நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய உயர் கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அவர் தனது விளக்கத்தில், “தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்

மொத்தம் உள்ள 4,750 தேர்வு மையங்களில் 6 தேர்வு மையங்களில்தான் பிரச்சினை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. 24 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை. பிரச்சினைக்குரிய தேர்வு மையங்களின் சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் தேர்வு நேரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்தே, மாணவர்களுக்கு தீர்வாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பின்னரே தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் நடந்த தேர்வில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. வினாத்தாள் கசிவும் எங்கும் நடைபெறவில்லை. தேர்வு நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாக நடந்தன. எனினும் புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். உயர்மட்ட குழு விசாரணைக் குழு ஒரு வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும்" என்று தெரிவித்தார்.

சர்ச்சையின் பின்னணி: இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெற்றது. ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட்தேர்வைப் பொருத்தவரை ஒருகேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாக விடையளித்தால் நெகடிவ் மார்க் முறையில் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.

அவ்வாறு கணக்கிடும்போது அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர் சரியாக விடையளிக்கும் போது 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரே ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அதற்கான நான்கு மதிப்பெண்கள் மற்றும் நெகடிவ் மார்க்காக 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். அந்த வகையில் முழு மதிப்பெண்ணுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களை பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அளித்துள்ள விளக்கத்தில், “தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எப்போது, யாரெல்லாம் விண்ணப்பித்தனர் என்ற விவரங்கள் எதுவும் இல்லை. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். கருணை மதிப்பெண்களால் 6 பேர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ள நிலையில், அதுகுறித்த எந்த தகவலும் தெரியாததால் தமிழக மாணவர்கள் நேர இழப்பை முன்னிறுத்தி நீதிமன்றத்தை நாடவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வை அளிக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT