சென்னை: தமிழகத்தில் பள்ளி திறக்கப்படும் முதல் நாளில் 70 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: “தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில்(2024-25) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட உள்ளன. முதல்நாளே பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகம், புவியியல் வரைபடம் ஆகிய பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி 70 லட்சத்து 67,094 மாணவர்களுக்கு பாடநூல்களும், 60 லட்சத்து 75,315 பேருக்கு நோட்டுப் புத்தகங்களும், 8 லட்சத்து 22,603 பேருக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்படும். இவை அனைத்தும் பள்ளிகளில் தயார் நிலையில் இருக்கின்றன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.