கல்வி

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் மட்டுமே அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிய இன்னும் 3 நாட்கள்மட்டுமே உள்ளன. இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும்.

அந்த வகையில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தி வருவதுடன் தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்ப பதிவு தொடங்கிய 29-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்பில் சேர 2,35,709 பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 1,87,517 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். அதில் 1,50,038 பேர் தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்குஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜுன் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இன்னும் 3 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் இருப்பதால், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT